இந்தியாவில் திரையரங்குகள் மீண்டும் திறப்பதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை.
இதற்கிடையில் சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் ஓடிடி (Over the top) எனப்படும் கட்டண வலைத் திரையில் வெளியிடப்பட்டது. அமேசோன் பிரைம் நிறுவனம் இந்தத் திரைப்படத்தை வெளியிட்டது. சூர்யாவின் மனைவியான ஜோதிகா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று சனிக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தனது சூரரைப்போற்று திரைப்படத்தையும் வலைத் திரையில் வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்திருக்கிறார்.
எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் உலகமெங்கும் திரையிடப்படும். பொன்மகள் வந்தாள் படமும் இதே தளத்தில்தான் திரையிடப்பட்டது.
“சூரரைப் போற்று” திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஏற்கனவே “இறுதிச் சுற்று” படத்தையும் மாதவன் நடிப்பில் சுதா இயக்கியிருந்தார்.
சூர்யாவின் நீண்ட விளக்க அறிக்கை
இதன் தொடர்பில் சூரியா விடுத்திருக்கும் நீண்ட விளக்க அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- “இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத் தானே செய்கிறது” என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று – எனத் தொடங்குகிறது இந்த அறிக்கை.
- கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒட்டுமொத்த மனித குலத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைத்திருக்கும் சூழலில் பிரச்சினைகளில் மூழ்கி விடாமல் நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவது முக்கியம்.
- இயக்குனர் சுதா அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிறேன்.
- இத்திரைப்படத்தை திரையரங்கில் அமர்ந்து என் பேரன்புக்குரிய சினிமா இரசிகர்களுடன் கண்டு களிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால் காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. உருவாகும் திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை.
- எனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதுவரை எட்டு படங்களை தயாரித்து வெளியீடு செய்து இருக்கிறது. மேலும் 10 படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்து இருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன்கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக அல்லாமல் தயாரிப்பாளராக முடிவெடுப்பது சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
- தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகைச் சார்ந்தவர்களும் என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்புகிற மக்களும் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படமாக சூரரைப்போற்று நிச்சயம் அமையும். மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள் கடினமாக உழைத்து ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியும் என நம்புகிறேன். அதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.
நற்பணிகளுக்காக 5 கோடி ரூபாய் வழங்குகிறார் சூர்யா
- இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன்.
- சூரரைப்போற்று திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன். பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் யுத்தகளத்தில் முன்னின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விழா விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
- உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் வாழ்த்தும் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். இந்த நெருக்கடி சூழலில் மன உறுதியுடன் எதிர்த்து மீண்டு எழுவோம்.