சென்னை – சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் அமேசோன் பிரைம் கட்டண இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு பரவலான வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்தப் படத்தை வெளியிட்டதற்காக கண்டனம் தெரிவித்த திரையரங்கு அதிபர்கள் அடுத்து வெளிவரப்போகும் சூர்யாவின் திரைப்படங்களை நாங்கள் திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என அறிவித்தனர்.
எனினும், திரையரங்குகளைத் திறப்பதற்கான தேதியை தமிழ் நாடு அரசாங்கம் இன்னும் நிர்ணயிக்கவில்லை. அறிவித்தபடி சூர்யாவின் திரைப்படங்களுக்கு தடைவிதிக்கப்படுமா என்பது அதன் பின்னர்தான் தெரிய வரும்.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படைப்பான “சூரரைப் போற்று” திரைப்படம் திரையிடத் தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். “இறுதிச் சுற்று” படத்தை இயக்கி பிரபலமானவர் சுதா கொங்கரா.
“சூரரைப் போற்று” கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. கொவிட்-19 பாதிப்புகளால் திரையரங்குகள் இயங்க முடியாத சூழலில் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
அமேசோன் பிரைமில் வெளியிடப்பட்டு “பொன்மகள் வந்தாள்” வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், திரையரங்கு அதிபர்கள் தொடர்ந்து தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீடு மேலும் சிக்கலாகலாம். தள்ளிப் போகலாம்.
எனவே, அந்தப் படத்தையும் அமேசோன் பிரைம் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 800 மில்லியன் ரூபாய் (80 கோடி ரூபாய்) விலையில் சூரரைப் போற்று திரைப்படம் விலை பேசப்படுவதால், அமேசோன் நிறுவனத்திடமே விற்றுவிடலாமா என படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.