திரையரங்குகளுக்கு எனத் தயாரிக்கப்பட்டு, அமேசோன் பிரைம் கட்டண இணையத் தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (மே 29) வெளியிடப்பட்டிருக்கும் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம்தான் அது!
கொவிட்-19 சூழ்நிலையால் நிகழ்ந்திருக்கும் மாற்றம் இது!
சரி! இனி படத்திற்கு வருவோம்!
கதை – திரைக்கதை
அத்தகைய காட்சிகளுடன் தொடங்குகிறது பொன்மகள் வந்தாள். இளம் சிறார்கள் கொலை, அதைக் கண்டுபிடிக்கும் காவல் துறை, அதற்குக் காரணமாக ஜோதி என்ற பெண்மணி காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவது, எனக் காட்சிகள் தொடங்குகின்றன.
அதன் பின்னர் பல ஆண்டுகள் முன்னோக்கி நிகழ்கால 2020-ஆம் ஆண்டுக்கு திரைக்கதை நகர்கிறது.
சமூகப் பிரச்சனைகளுக்காக வழக்கு தொடுக்கும் பாக்கியராஜ், அவரது மகள் வழக்கறிஞர் ஜோதிகா எனக் காட்சிகள் தொடங்குகின்றன. 2004 ஜோதி கொலை வழக்கை, குழந்தைகள் மரணத்தை மீண்டும் பாக்கியராஜ் கிண்டிக் கிளறி நீதிமன்றத்தில் மீண்டும் தொடக்க, ஏன் அவர் இதைச் செய்கிறார், ஜோதிகாவுக்கு இதில் என்ன சம்பந்தம் என்ற முடிச்சுகளோடு கதை நகர்கிறது.
வழக்கை மூடி மறைக்க பெரும் பணக்காரரான தியாகராஜன் ஏன் முயற்சி எடுக்கிறார், அவர் நியமிக்கும் பிரபலமான வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கை எப்படி திசை திருப்புகிறார் என்பதைக் காட்டும் நீதிமன்றக் காட்சிகள் அடுத்து தொடர்கின்றன.
பின் பாதிப் படத்தில் 2004 கொலைச் சம்பவங்களின் மர்ம முடிச்சுகள், பல திருப்பங்களுடன் அவிழ்க்கப்படுகின்றன.
பலமும், பலவீனமும்…
படத்தின் இறுதிக்காட்சியில் கூட ஒரு முக்கியத் திருப்பத்தை வைத்திருக்கிறார்கள். முழுப் படத்தையும் பார்த்தால்தான் அந்தத் திடுக்கிடும் திருப்பத்தின் தாக்கத்தை உணர முடியும்.
ஆனால் ஆரம்பம் முதலே படத்தின் திருப்பங்கள் இப்படித்தான் இருக்கும் என ஊகிக்க முடிவதும், அதன்படியே கதை நகர்வதும் படத்தின் பலவீனம்.
சிறுமிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதுதான் கதையின் அடிப்படை என்பதை ஆரம்பக் காட்சிகளிலேயே நமக்குப் புரிய வைத்து விட்டு பின்னர் அதை விலாவாரியாக விரிவாக்கிக் காட்டுவது தேவையில்லாத ஒன்று. படத்திற்கு தொய்வையும் ஏற்படுத்துகிறது.
படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் அதே காட்சிகளை பின்பகுதியில் மீண்டும் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம். இரசிகர்களுக்கு குழப்பமில்லாமல் நன்கு புரிந்திருக்கும்.
ஊட்டியின் ஒளிப்பதிவு இணையத்தில் பார்ப்பதால் அதன் நேர்த்தியை உணர முடியவில்லை.
படத்தைத் தூக்கி நிறுத்துவது, ஜோதிகா அல்ல! வழக்கமாகப் பார்த்திபன்தான். படம் முழுக்கப் பின்னியிருக்கிறார்.
நீதிமன்றக் காட்சிகளிலும், மற்ற இடங்களிலும் தனக்கே உரிய ஏற்ற இறக்கங்களுடன் வசனங்களை உச்சரித்து கலகலப்பூட்டுகிறார். அவர் இல்லாமல் படத்தைக் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை.
ஜோதிகா வழக்கமான நடிப்புதான். நீதிமன்றக் காட்சிகளில் வழக்கறிஞராக இன்னும் அதிரடியாக நடித்து விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். அதற்குக் காரணம் இயக்குநரும் அதுபோன்ற காட்சிகளில் பார்த்திபனைச் செதுக்கிய அளவுக்கு ஜோதிகாவைச் செதுக்காமல் கோட்டை விட்டதுதான்!
ஜேஜே பிரெடரிக் எழுதி இயக்கியிருக்கும் முதல் படம் என்ற வகையில் பாராட்டுகள்.
தொடக்கம் முதல் இறுதி வரை திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான திரைக்கதை, உச்ச நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும்,உடன் நடித்திருக்கும் துணை நட்சத்திரங்களின் சிறந்த நடிப்பு ஆகியவற்றால், “தாராளமாகப் பார்க்கலாம்” என்ற சான்றிதழைப் பெறுகிறது, “பொன்மகள் வந்தாள்”.