வாஷிங்டன் – ஹாங்காங்கில் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள், அந்தப் பிரதேசத்தின் மீது தனது ஆதிக்கத்தை மேலும் வலிமையாக்க சீனாவின் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கும் புதிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்து சலுகையை ஹாங்காங் கூடிய விரைவில் இழக்கலாம்.
அனைத்துலக நிதிச் சந்தையாக இதுநாள் வரை திகழ்ந்து வந்த ஹாங்காங் அமெரிக்காவின் முடிவினால் உடனடியாக இழப்பை எதிர்நோக்க வாய்ப்பில்லை. அங்கு செயல்படும் மேற்கத்திய நிறுவனங்களும் உடனடியாக அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுக்காது.
என்றாலும், இதுநாள் வரை எந்த அம்சம் ஹாங்காங்கை அனைத்துலக நிறுவனங்களால் ஈர்க்கப்படும் பிரதேசமாக உருமாற்றியதோ அந்த கவர்ச்சிகரமான அம்சத்தை ஹாங்காங் இழந்து விடும். அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்து என்ற சலுகைதான் அது.
இந்தச் சலுகையின் மூலம் பல பொருளாதார, வணிக அனுகூலங்களை ஹாங்காங் பெற்று வந்துள்ளது.
அதன்பின்னர் ஹாங்காங்கை அனைத்துலக நிதி நிறுவனங்கள் நாடிச் செல்வதற்கான வாய்ப்புகளும் குறைவு. அமெரிக்கா-சீனா வணிகப் போர், சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய காரணங்களால் மெல்ல மெல்ல அனைத்துலக நிறுவனங்கள் ஹாங்காங்கில் இருந்து வெளியேறத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ (படம்) இன்று புதன்கிழமை இது குறித்து கருத்துரைக்கையில் கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் அல்லாமல் சுதந்திரமாக இயங்கி வந்த ஹாங்காங் இனியும் அப்படியான சூழலில் இல்லை எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்தே ஹாங்காங் தனது சிறப்பு சலுகைகளை அமெரிக்காவிடம் இருந்து இழக்கும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.