சென்னை – சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடாமல் நேரடியாக இணையத்திலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அதிரடியாக அறிவித்தார் கமல்ஹாசன்.
தமிழ் திரையுலகமே பொங்கியெழுந்தது. இத்தகைய ஏற்பாடுகளினால் திரையுலகின் வணிகக் கட்டமைப்பே நசிந்து போகும் என திரையரங்கு அதிபர்களும், படத் தயாரிப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இன்றைக்கு காலத்தின் கட்டாயம் வேறுவிதமாக இருக்கிறது. கொவிட் 19 பிரச்சனைகளால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. படப்பிடிப்புகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றன. தயாரித்து முடிக்கப்பட்டு திரையீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களை நேரடியாக இணையத்தின் வழி கட்டணம் செலுத்திப் பார்க்கப்படும் தளங்களின் வழியாக வெளியிட தமிழ் திரையுலகம் தயாராகி விட்டது.
முதல் படமாக எதிர்வரும் மே 29-ஆம் தேதி அமேசோன் பிரைம் தளத்தில் வெளியாகிறது ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் “பொன்மகள் வந்தாள்” என்ற திரைப்படம்.
இந்தப் படத்திற்கான முன்னோட்டம் எதிர்வரும் மே 21 வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து முழுமையடைந்த பல இந்தியப் படங்களை நேரடியாக ஓடிடி (OTT – Over the top movies) எனப்படும் நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் போன்ற தளங்களில் ஒளியேற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் 45 மில்லியன் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகவும், 90 மில்லியன் ரூபாய் கொடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது தளத்தில் வெளியிட ஒப்புக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.