சென்னை – கொவிட்-19 பாதிப்புகளும், நடமாட்டக் கட்டுப்பாடுகளும் தமிழ்த் திரையுலகிலும் அதிரடியான புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அறிகுறிகள் இல்லாத நிலையில் படம் முடிவடைந்தும் இன்னும் திரையிடப்பட முடியாத நெருக்கடியில் பல படங்கள் வரிசை பிடித்து நிற்கின்றன.
படத்திற்கான முதலீடுகள் மீதான கடன்களின் வட்டி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் படத் தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
அப்படியே திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் எப்போது அவை திறக்கப்படும் என்பது ஒருபுறமிருக்க எடுத்த எடுப்பிலேயே மீண்டும் கூட்டங்கள் திரளுமா? அல்லது அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை மேலும் விதிக்குமா? ஒரு காட்சிக்கு இத்தனை இரசிகர்கள்தான் பார்க்க முடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகுமே – ஏன் இந்தியத்த திரையுலகே – நிச்சயமற்ற சூழலில் இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து முழுமையடைந்த படங்களை நேரடியாக ஓடிடி (OTT – Over the top movies) எனப்படும் நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் போன்ற தளங்களில் ஒளியேற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை இணையத் தளம் ஒன்றின் வழி அதிகாரபூர்வமாக ஒளிபரப்ப முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தை சுமார் 90 மில்லியன் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள திரைப்படங்களை இணையத் தளத்தில் வெளியிடும் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாகவும் இதன் மூலம் படத் தயாரிப்பு நிறுவனம் இலாபம் பார்க்க முடியும் என்பதால் அவ்வாறே அந்தப் படத்தை விற்றுவிட சூர்யா முடிவெடுத்திருக்கிறாராம்.
மேலும், வேறு சில சாதகங்களும் படக் குழுவுக்கு இருக்கின்றன. தொடர்ந்து கொண்டிருக்கும் தயாரிப்புக் கடன் மீதான வட்டி உயராது என்பது அதில் ஒன்று. படத்தைத் திரையிடுவதற்கான – சந்தைப்படுத்தும் – செலவினங்களும் இருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக அப்படியே திரையிட்டாலும் படம் இலாபத்தைக் காணுமா என்ற அச்சமும் தேவையில்லை.
குறைந்த இலாபம் என்றாலும் கையைக் கடிக்காத நிலை என்பதால் இத்தகைய முடிவை எடுக்க பல படங்களின் தயாரிப்பாளர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனராம்.
எனினும் திரையரங்குகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட இதுபோன்ற திரைப்படங்களை இணையத் தளத்தில் முதலில் ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்களின் அடுத்த படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்களின் சங்கம் எச்சரித்துள்ளது.