Home One Line P1 அமைச்சருக்கு ஆயிரம் ரிங்கிட்தான் அபராதமா? – கஸ்தூரி பட்டு கண்டனம்

அமைச்சருக்கு ஆயிரம் ரிங்கிட்தான் அபராதமா? – கஸ்தூரி பட்டு கண்டனம்

756
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி கடந்த ஜூலை 7ஆம் தேதி துருக்கியில் இருந்து நாடு திரும்பினார். ஆனால், நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின்படி அவர் 14 நாட்களுக்கான தனிமைப்படுத்தலைப் பின்பற்றவில்லை.

இதைத்தொடர்ந்து எதிர்க் கட்சிகளிடம் இருந்தும் சமூக ஊடகங்களில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து செபுத்தே சிபி நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் நாடாளுமன்றக் கூட்டத்திலும் கேள்வி எழுப்பி கடுமையாக சாடினார்.

இதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமைச்சர் மீறி இருக்கிறார் என உறுதி செய்தது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி அவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது எனவும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது. தனது அபராதத்தை அவர் செலுத்தி விட்டதாகவும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

இதற்கிடையில் அமைச்சர் கைருடினும் மலேசியர்களிடம் இதுகுறித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான தனது அமைச்சருக்கான சம்பளத்தை கொவிட் -19 நிதிக்காக வழங்குவதாகவும் கைருடின் தெரிவித்தார்.

ஏற்கனவே எல்லா அமைச்சர்களும் தங்களின் மார்ச், ஏப்ரல் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதிக்காக வழங்கியிருக்கின்றனர்.

துருக்கியில் இருந்து நாடு திரும்பியதும் ஜூலை ஏழாம் தேதி அன்று அவருக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவித்தது.

அதன்பிறகும் இரண்டு முறை அவர் கொவிட்-19 தொற்று பரிசோதனைகளை செய்துகொண்டார் என்றும் இரண்டு முறையும் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது எனவும் சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

திரெங்கானு மாநிலத்தில் உள்ள கோல நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கைருடின் பாஸ் கட்சியைச் சேர்ந்தவராவார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் எத்தகைய குற்றங்களை மீறினார் என்பது போன்ற விவரங்களை சுகாதார அமைச்சு வெளியிடவில்லை.

கைருடினோடு துருக்கியிலிருந்து நாடு திரும்பிய குழுவினர்களில் மற்றவர்களுக்கும் இதே போன்ற அபராதம் விதிக்கப்பட்டதா அவர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பின்பற்றினார்களா என்பது போன்ற விவரங்களையும் சுகாதார அமைச்சு விளக்கவில்லை.

பின்னர் தனியாக விடுத்த அறிக்கை ஒன்றில் கைருடின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காகவும் நடந்த தவறுக்காகவும் மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் என்ற முறையில் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நானும் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளேன் எனவும் கைருடின் குறிப்பிட்டார்.

கஸ்தூரி பட்டு கண்டனம்

கஸ்தூரி ராணி பட்டு

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறும் சாதாரண பொதுமக்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை என விதிக்கப்படும் நிலையில் அமைச்சர் ஒருவருக்கு வெறும் ஆயிரம் ரிங்கிட்தான் அபராதமா? இதுதான் அரசாங்கம் காட்டும் முன்னுதாரணமா? என பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு சாடியிருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கஸ்தூரி பட்டு சுகாதார அமைச்சின் போக்கைக் கடுமையாகக் குறை கூறினார். “இரண்டாயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை அபராதமாக விதித்தால் கைருடின் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விடுவார் என்பதால் அவருக்கு வெறும் ஆயிரம் ரிங்கிட் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறதா?” என்றும் கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.