புதுடில்லி : இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவது கைலாசமலை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இந்தப் பகுதியில் தரையிலிருந்து வானுக்குப் பாய்ச்சப்படும் ஏவுகணைகளை நிறுத்துவதற்காக இராணுத் தளவாடங்களை நிறுவ சீனா நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அத்தகைய நடவடிக்கைகளின்போது கைலாசமலை பகுதியில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை சீன அரசாங்கம் சேதப்படுத்தியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
சீனா இராணுவத் தளவாடங்களை நிறுவுவதைக் காட்டும் துணைக்கோளப் புகைப்படங்கள் காட்டுவதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. கைலாஷ்-மானசரோவர் என்று அழைக்கப்படும் இந்த இடம் முழுவதும் தற்போது இராணுவத் தளவாடங்களின் இருப்பிடமாகத் தெரிகிறது என்றும் செய்திகள் குறிப்பிட்டன.
கைலாஷ்-மானசரோவர் நோக்கிச் செல்லும் பகுதியில் 80 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலையை, 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்தியா நிர்மாணிக்கிறது. இந்தியா, சீனா, நேப்பாளம் என மூன்று இடங்களும் இணையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இந்த சாலை அமைந்திருக்கிறது.
கைலாஷ்-மானசரோவர் பகுதிக்கான சாலைப் போக்குவரத்து இந்த புதிய சாலையின் மூலம் விரைவானதாக அமையும் என்பதோடு, சுமுகமானதாகவும் அமையும்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில்தான் சீனா தனது பகுதியில் இராணுவ ஏவுகணைத் தளங்களை நிறுவத் தொடங்கியிருக்கிறது.