Home One Line P2 ஜெர்மனியிலிருந்து 12 ஆயிரம் துருப்புகளை இடம் மாற்றுகிறது அமெரிக்கா

ஜெர்மனியிலிருந்து 12 ஆயிரம் துருப்புகளை இடம் மாற்றுகிறது அமெரிக்கா

661
0
SHARE
Ad
மைக் பாம்பியோ (இடதுகோடி) – போலந்து நாட்டின் தற்காப்பு அமைச்சர் மரியூஸ் பிளாஸ்சாக் (வலதுகோடி)

வாஷிங்டன் : ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் இராணுவத் துருப்புகளை வெளியேற்றி போலந்து நாட்டில் அமர்த்த அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.

இந்த முடிவு இராணுவ ரீதியாக தவறான முடிவாக அமையக் கூடும் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இதன் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை போலந்து நாட்டின் தற்காப்பு அமைச்சர் மரியூஸ் பிளாஸ்சாக்-குடன் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

ஒருகாலத்தில் ஜெர்மனி மேற்கு-கிழக்கு என இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்த காலகட்டத்தில் மேற்கு ஜெர்மனியில் தனது துருப்புகளை பாதுகாப்பு கருதி நிறுத்தி வைத்தது அமெரிக்கா.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரஷியாவிடமிருந்தோ, கிழக்கு ஜெர்மனியிடமிருந்தோ போர் அச்சுறுத்தில் நேரலாம் என்ற காரணத்திற்காக இந்தத் துருப்புகளை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

ஆனால், கொர்பாசேவ் இரஷிய அதிபராக இருந்தபோது இரண்டு ஜெர்மனிகளையும் பிரித்து வைத்த பெர்லின் சுவர் அகற்றப்பட்டது. இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றாக இணைந்தன. இன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக ஜெர்மனி உருவெடுத்திருக்கிறது.

எனவே எந்த இடத்தில் நிலையற்றத் தன்மை நிலவுகிறதோ – எந்த நாட்டில் அமெரிக்கத் துருப்புகளுக்கு தேவைகள் அதிகமாக இருக்கிறதோ – அந்த நாட்டில் அவர்களை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக போலந்து தற்காப்பு அமைச்சர் கூறியிருக்கிறார்.

வெளியேற்றப்படும் 12 ஆயிரம் துருப்புகளில் சுமார் ஆயிரம் பேர் போலந்து நாட்டுக்கு அனுப்பப்படுவர். ஏற்கனவே போலந்தில் 4,500 அமெரிக்கத் துருப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மற்ற துருப்புகள் இத்தாலி அல்லது பெல்ஜியம் நாடுகளுக்கு அனுப்பப்படுவர். எஞ்சியவர்கள் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு தேவையான நேரத்தில் தேவையான நாட்டுக்கு அனுப்பப்படும் வகையில் அங்கு நிறுத்தி வைக்கப்படுவர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான துருப்புகளை அமெரிக்கா ஐரோப்பாவில் நிறுத்தி வைத்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

அமெரிக்காவுக்கும், இரஷியாவுக்கும் இடையில் பனிப்போர் நிலவிய உச்சகட்ட காலகட்டத்தில் சுமார் 400,000 துருப்புகளை அமெரிக்கா ஐரோப்பாவில் வைத்திருந்தது.