நியூயார்க் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உலகின் முதல் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது ஆப்பிள். அதைவிட ஆச்சரியம் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் மதிப்பு இருமடங்காகியிருக்கிறது.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஆப்பிளின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன். அதாவது மலேசிய ரிங்கிட் மதிப்பில் ஆப்பிளின் சந்தை மதிப்பு இன்றைக்கு சுமார் 8,360 பில்லியன் ரிங்கிட்டாகும்.
கொவிட்-19 பாதிப்புகளுக்கிடையிலும் இந்த ஆண்டில் மட்டும் அதன் பங்குகள் 60 விழுக்காடு உயர்ந்தன.
கொவிட்-19 பிரச்சனைகளால் பல நிறுவனங்கள் வணிக வருமான இழப்பை எதிர்நோக்கின. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான நிறுவனங்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் பார்க்கப்படுகின்றன.
அதன் காரணமாகவே, ஆப்பிள், அமேசோன், பேஸ்புக், கூகுள் தாய் நிறுவனமான அல்பாபெட் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
இந்த ஆண்டு பிற்பகுதியில் 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய புதிய இரக ஐபோன்களை ஆப்பிள் வெளியிடவிருக்கிறது. ஒரு ஐபோன் ஆயிரம் டாலர் என்ற அளவில் உயர்ந்த விலையை இந்த ஐபோன்கள் கொண்டிருக்கும்.
வணிக உலகம் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இறங்குமுகமாக இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இத்தகைய அதிக விலை ஐபோன்கள் சந்தையில் வெற்றி பெறுமா என்பதைக்காண வணிக உலகம் காத்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு – அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு – என அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடுத்து எத்தனை ஆண்டுகளில் தொட முடியும் என்பது போன்ற ஆரூடங்கள் இப்போதே தொடங்கி விட்டன.
ஆப்பிள் வளர்ந்த கதையும் – அதன் தலைமைச் செயல் அதிகாரியின் சம்பளமும்…
ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் காலமாகி 9 ஆண்டுகள் கடந்து விட்டன. அவருக்குப் பின்னர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் டிம் கூக்.
கடந்த 9 ஆண்டுகளில் முன்பிருந்ததை விட பன்மடங்கு அதிகமாக சந்தை மதிப்பில் உயர்ந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். 44 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூட்டாகத் தோற்றுவித்த நிறுவனம்தான் ஆப்பிள்.
ஜாப்ஸ் இறந்தபோது அவர் விட்டுச் சென்ற ஆப்பிளின் சந்தை மதிப்பு வெறும் 350 பில்லியன் டாலர்கள்தான்! இப்போது அதன் மதிப்பு 2 ஆயிரம் பில்லியன் டாலர். இப்போது உங்களுக்கே கணக்குப் போட்டுப் பார்க்க முடியும் – எந்த அளவுக்கு ஆப்பிள் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது என்று!
இதைத் தொடர்ந்து ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் டிம் கூக் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களாக இன்றைக்கு மதிப்பிடப்படுகிறது.
பொதுவாக ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, அதன் தலைமைச் செயல் அதிகாரிகளாக செயலாற்றுபவர்கள்தான் பில்லியனர்களாக சொத்து மதிப்பில் உருவெடுப்பார்கள்.
அமேசோன் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ், பேஸ் புக்கின் மார்க் சக்கர்பெர்க் ஆகியோர் இத்தகைய பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவார்கள்.
ஆனால் டிம் கூக் இதில் விதிவிலக்கு. ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரியாக மட்டும் இருந்து கொண்டு பில்லியன் டாலர் சொத்துகளைக் கொண்ட பணக்காரர்கள் குழாமில் இணைந்துள்ளார் டிம் கூக்.
இதைப் போன்ற மற்றொரு உதாரணம் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையாவார்.
59 வயதான டிம் கூக், தலைமைச் செயல் அதிகாரி என்ற முறையில் மில்லியன் கணக்கான ஆப்பிள் பங்குகளையும் உரிமையாளராகக் கொண்டுள்ளார்.
அவரது சொத்துகளில் பெரும் பகுதியையும், தனது ஆப்பிள் பங்குகளையும் அறப் பணிகளுக்கு வழங்கியிருப்பதாக குக் 2015-ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார்.
ஆனால் அவர் எவ்வளவு சொத்துகளை அறப்பணிகளுக்கு வழங்கியிருக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதன்படி அவர் தனது சொத்துகளை வழங்கியிருந்தால் அவரது சொத்தின் மதிப்பு மேலும் குறையலாம்.
1998-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய டிம் கூக் தொடர்ந்து குறிப்பிட்ட தவணக்கு ஒருமுறை ஆப்பிள் பங்குகளை தனது பணித் திறனுக்காகப் பெற்று வந்தார்.
இந்த மாத இறுதியில் மேலும் 560,000 ஆப்பிள் பங்குகளை டிம் கூக் பெறுவார்.
அதன் மதிப்பு சுமார் 252 மில்லியன் டாலர்களாகும். இதில் பாதியளவு வரி செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டாலும் டிம் கூக்கின் சொத்து மதிப்பு மேலும் 100 மில்லியன் டாலருக்குக் கூடுதலாக உயரும்.
தற்போது டிம் கூக் நேரடியாக 847,969 ஆப்பிள் பங்குகளைக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவரது சொத்து மதிப்பு 650 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆகஸ்ட் 2011-இல் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் காரணமாகத் தனது பொறுப்புகளில் இருந்து விலகியபோது அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு இடைக்காலமாக நியமிக்கப்பட்டார் டிம் கூக்.
பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமான பின்னர் நிரந்தரமாக தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 9 ஆண்டுகளில் உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக ஆப்பிள் நிறுவனத்தை உருமாற்றியிருக்கிறார் டிம் கூக்.