நியூயார்க் : பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது.
அவரது பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளரான சோசியல் நெட்வொர்க் பங்கு விலைகள் உயர்ந்திருக்கின்றன. அதைக் கொண்டு பார்க்கும்போது அவரது சொத்து மதிப்பு குறைந்தபட்சம் 100 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று வணிக ஊடகங்கள் மதிப்பிட்டிருக்கின்றன.
உலக அளவில் சக்கர்பெர்க்கைத் தவிர மேலும் இருவர் மட்டுமே 100 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர்.
ஒருவர் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸ். இன்னொருவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ்.
ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சக்கர்பெர்க். அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் தங்கும் அறை ஒன்றில் 2004-ஆம் ஆண்டில் அவர் இன்னொரு நண்பருடன் இணைந்து பேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்.
பேஸ்புக் நிறுவனத்தில் 13 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.
36 வயதான சக்கர்பெர்க் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் என்பதோடு, அந்நிறுவனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை பங்குகளையும் கொண்டிருக்கிறார்.
வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 6) பேஸ்புக்கின் பங்கு விலைகள் 6.5 விழுக்காடு உயர்ந்தன. அதற்கு முதல்நாள் டிக்டாக் குறுஞ்செயலின் மறுபதிப்பான ரீல்ஸ் என்ற குறுஞ்செயலியை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பேஸ்புக் வெளியிட்டது.
குறுகிய நேர காணொளிப் பதிவுகளை இந்த ரீல்ஸ் குறுஞ்செயலி பதிவேற்றும்.
டிக்டாக் குறுஞ்செயலி தடைசெய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பேஸ்புக்கின் புதிய குறுஞ்செயலி பயனர்களின் அமோக ஆதரவைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பேஸ்புக் தவிர்த்து, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்எப் ஆகிய சமூக ஊடகங்களின் உரிமையாளராகவும் பேஸ்புக் நிறுவனம் திகழ்கிறது. ஒட்டுமொத்தமாக 3 பில்லியன் பயனர்களை பேஸ்புக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதற்காக 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.