Home வணிகம்/தொழில் நுட்பம் 1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்

1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்

1739
0
SHARE
Ad

நியூயார்க் – அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 207.05 டாலராக கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் – அதாவது ஆயிரம் பில்லியன் – டாலரைத் தாண்டியது. எனினும், இந்த நிலைமை நிரந்தரமானது அல்ல. ஆப்பிள் நிறுவனத்தின் விலைகள் குறைந்தால் அதன் சந்தை மதிப்பும் குறையக் கூடும். ஆனாலும், ஆயிரம் பில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சிறப்பை ஆப்பிள் பெறுகிறது.

நிறைவடைந்த மூன்றாம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் வலிமையான அளவில் அதிகரித்ததைத் தொடர்ந்தும், அந்நிறுவனம் குறித்து ஆய்வாளர்கள் அறிவித்த உத்தேச இலாபத்தை விடக் கூடுதலான இலாபத்தை அந்நிறுவனம் அடைந்ததைத் தொடர்ந்தும் பங்குச் சந்தையில் அதன் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

மூன்றாம் காலாண்டு முடிய 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் இலாபத்தை ஈட்டியதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இருப்பினும் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடையும் முதல் நிறுவனம் ஆப்பிள் அல்ல. 2007-ஆம் ஆண்டில் பெட்ரோசீனா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தொட்டது. ஆனால் அதன் பின்னர் கொஞ்ச காலத்தில் அந்த சந்தை மதிப்பு சரிந்தது.

இப்போதைக்கு 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடையும் ஒரே அமெரிக்க நிறுவனமாக – பங்குச் சந்தையில் இருக்கும் ஒரே நிறுவனமாக – ஆப்பிள் திகழ்கிறது.

மற்றொரு அமெரிக்க நிறுவனமான அமேசோனும் மிகவும் சாதகமான 3-ஆம் காலாண்டு கணக்கறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, விரைவில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.