கோலாலம்பூர் – செப்டம்பரில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு 5 இந்தியர்கள் குறி வைத்திருக்கின்றனர். அமைச்சர் சேவியர் ஜெயகுமார், மைக்கல் தமிழ், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம், கே.வசந்தகுமார், பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோரே அந்த ஐவர்.
இவர்களில் கேசவன் சுப்பிரமணியம் ஏற்கனவே, ரபிசி ரம்லியின் அணியின் உதவித் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சேவியரோ அஸ்மின் அலிக்கு நெருக்கமானவராகப் பார்க்கப்படுவதால் அவரது அணியில் இடம் பெற்றிருப்பார் எனத் தெரிகிறது. மற்ற 3 இந்திய வேட்பாளர்களும் தங்களின் சொந்த ஆதரவை வைத்துப் போட்டியில் இறங்குகின்றனர்.
வசந்தகுமார் முன்பு ஹிண்ட்ராப் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு கொண்டு, 2007 ஹிண்ட்ராப் போராட்டத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர். 2013 பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். எனினும் வெற்றி பெறவில்லை.