நியூ யார்க் – அக்டோபர் 5, 2011 ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல தொழில்நுட்ப உலகிற்கே அதிர்ச்சி தரக் கூடிய நாளாக இருந்தது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அன்று தான் மறைந்தார். அவர் மறைந்து நான்கு வருடங்கள் ஆகி உள்ள நிலையில், ஒவ்வொரு அக்டோபர் 5-ம் தேதியும் ஆப்பிள் நிறுவனம் அதனை கருப்பு நாளாகவே பார்க்கிறது.
கடந்த 5-ம் தேதியும், ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து நினைவலைகள் அங்கு மேலோங்கின. டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களிலும் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து ஹேஷ் டேக்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதய தலைவரும், ஸ்டீவ் ஜாப்சின் மிக நெருங்கி நண்பருமான டிம் குக், ஜாப்ஸ் குறித்து தனது ஊழியர்களிடம் மின்னஞ்சல் மூலம் நினைவு கூர்ந்தார்.
அவர் அந்த மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:-
“ஸ்டீவ் இறந்து இன்றுடன் நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஸ்டீவ் மறைந்த அந்த நாளில் தான் உலகம் தனது தொலைநோக்குப் பார்வையை தொலைத்துவிட்டது. ஆப்பிள் அதன் தலைவரை இழந்ததும் அன்று தான். என்னைப் போன்றவர்கள் உற்ற நண்பனை இழந்ததும் அன்று தான்.”
“ஸ்டீவ் மிகச் சிறந்த அறிவாளி. அவரின் முன்னுரிமைகள் எளிமையானவை. அவர் தனது குடும்பத்தை, ஆப்பிள் நிறுவனத்தை, தன்னுடன் இணக்கமாக பணியாற்றும் ஊழியர்களை மிகவும் நேசித்தார். ஆப்பிள் சமூகம் எப்போதும் அவரை நேசித்துக் கொண்டே இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்த புதியவர்கள் ஸ்டீவ் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை எனில் நீங்கள் வேறு எங்கோ பணி செய்கிறீர்கள் என்று அர்த்தம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மரணப்படுக்கையில் இருந்த போது டிம் குக் தனது கல்லீரலின் ஒரு பாதியை தானமாக கொடுக்க முன் வந்தார். எனினும், ஜாப்ஸ் அதற்கும் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.