Home Featured நாடு ‘வன தேவதை’ நாவல் குறித்து நாவலாசிரியர் கோ.புண்ணியவானுடன் சுவாரசிய உரையாடல்!

‘வன தேவதை’ நாவல் குறித்து நாவலாசிரியர் கோ.புண்ணியவானுடன் சுவாரசிய உரையாடல்!

1315
0
SHARE
Ad

punniகோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான் புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என படைப்பிலக்கியத்தின் பன்முகத்தை நிரூபித்தவர். அதற்கான அடையாளத்தை  இலக்கிய உலகில் வலிமையாக நிறுவியரும் கூட. தேசிய அளவில் தன்னுடைய படைப்பு ஆளுமைக்குப் பல விருதுகள் பெற்றவர். ஆனால் சமீபமாக வேறொரு முகத்தோடு வாசிப்புலகை அணுகுகிறார். அதாவது, சிறுவர் வாசிப்புக்கு ஏற்றவாறு ஒரு திகில் நாவலைக் கொண்டு வந்திருக்கிறார்.  ஏன் இந்த மடைமாற்றம் நிகழ்ந்தது என்பதைக் கேட்டறியவே அவருடன் இந்தச் சிறிய உரையாடலை நிகழ்த்தினோம்.

கேள்வி: இதுவரை முதிர்ந்த வாசகர்களுக்கு எழுதிவந்த தாங்கள் தற்போது சிறுவர் நாவலை எழுதக் காரணமான பின்புலம் என்ன?

பதில்: நான் இதுவரை பல்வேறு இலக்கிய வடிவங்களில் ஏழு நூல்களைக் கொண்டு வந்திருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல், நாவல்கள், கவிதைத்தொகுப்பு  என அவை அடங்கும். ஒவ்வொன்றும் 1200  பிரதிகள் அச்சிடுவேன். ஆனால் அவை விற்று முடிவதற்கு மூன்றாண்டுகள் ஆகிவிடும். சில சமயம் அதற்கும் மேலாக.தமிழுக்கு நேரும் அவலம் என்னவென்றால் படைப்பாளன் தானே எழுதிப் பதிப்பித்த நூல்களை வாசகனிடம் கொண்டு சேர்க்கும் அவலம் தமிழைத் தவிர வேறெந்த மொழியிலும் நிகழாது. அதுகூட பரவாயில்லை நூலை வாங்குவோர் எண்ணிக்கை சமீப காலமாக மிகவும் குறைந்துவிட்டது. 1000  நூல்களை குறைந்தது 6 லட்சம் தமிழ் மொழி வாசிக்கத் தெரிந்தோரிடம் சேர்க்க முடியவில்லை. அப்படியென்றால் வாசகர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்றுதானே பொருள்? இது ஏன் நிகழ்ந்தது என்ற காரணங்கள் எல்லாருக்கும் தெரிந்த்துதான். வாட்ஸப் முகநூல் டிவிட்டர் போன்றவை வாசகனை உள்ளிழுத்துக்கொண்டன என்ற காரணமே அது. ஆனால் அவை நூல்கள் போல நிறைவான வாசிப்பை நல்குமா என்றால் இல்லையென்றே சொல்ல முடியும். தொலைக்காட்சி தொடர்கள் பெண் வாசகர்களை கிட்டதட்ட முழுமையாக இழுத்து கட்டிப்போட்டுக் கொண்டன.  வாடிக்கையாளனே இல்லையே கடையை எப்படித் திறப்பது?  எனவே சிறுவர்களை நம்பித்தான் ஒரு புதிய தலைமுறை வாசகப் பெருமக்களை உருவாக்க முடியும். வாசிக்கும் நேரம் உன்னதத் தருணம் என்பதை அவர்களுக்குச் சிறு வயதிலேயே உணர்த்த வேண்டும். புத்தகம் என்பது இணை பிரியா தோழன், உள்மனதை குதூகளிக்க வைக்கும் உன்னத பொக்கிஷம், வாசித்தலே உயர்ந்த வாழ்க்கையை வாழ உதவும் ஊடகம் என்று அவனுக்கு உணர்த்த வேண்டும். இவர்கள் பெரியவர்களானாலும் இந்த  பழக்கம்  கைவிட்டுப் போகாது.  டீ குடித்துப் பழகியவனுக்கு  எப்படி அந்தப் பழக்கத்தை எளிதில்  விடமுடிவதில்லையோ , அதுபோலவே வாசித்து அதன் சுவையை உணர்ந்தவனாலும் அதனை விட முடியாது.  சின்ன வயதில் ஆழமாக விதைக்கப்பட்ட ஒன்று பின்னாளில் ஆலமரமாக வளர்ந்து விழுது விட்டும் நிற்கும். வாசிக்கும் பழக்கம் கொண்ட ஒருவானால் தன் அடுத்த சந்த்தியினரையும் தன்னிச்சையாக அதன் பொருட்டு ஈர்க்க முடியும்.  எனவே அடுத்தடுத்த தலைமுறையினரை எந்த வற்புறுத்தலுக்கும் ஆளாக்காமல் சுயமாக நூல்களைத் தேடி அடையும் ஒரு இலக்கை அடைய முடியும்.

#TamilSchoolmychoice

கேள்வி:  மேலை நாடுகளிலில் தான் வாட்ஸாப் முகநூல் தொடக்கமே உண்டானது. ஆனால் அங்கே வாசிக்கும் பழக்கம் வேரூன்றிக் கிடக்கிறதே அது அப்படி?

பதில்:  அவர்களுக்கு மிகச் சிறு வயதில் பெற்றோராலும் ஆசிரியர்களாலாலும் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லப்படுகிறது. செவி வழி கேட்டுப் பழகிய காரணத்தால்தான் பின்னாளில் நூல்களைத் தேடிப் போகும் பண்பாடு உருவாகிறது. வாட்சாப்பில் முகநூலில் கிடைக்கும் துணுக்குச் செய்திகள் நம்மைப்போல  அவர்களைப் பெரிதாகக் கவர்வதில்லை. ஆழமான, அறிவு சார்ந்த தேடலுக்குப் பழகிப்போனவர்கள். அதன் சுவைக்கு அடிமையானவர்கள் அதனால்தான் நூலின் வழி தேடலைக் கண்டடைகிறார்கள். முழுமையான வாழ்வை அனுபவிக்கிறார்கள்.

கேள்வி: நம் மாணவர்களிடத்தில் தற்போது வாசிக்கும் பழக்கம் எந்த நிலையில் உள்ளது?

பதில்:  தீவிரமாக இல்லை என்றே சொல்லவேண்டும்.  அதாவது ஒவ்வொரு நாளும் வாசிக்காமல் அந்த நாள் முழுமையடையக் கூடாது என்ற தீவிரம் இல்லை என்கிறேன். இது ஏன்? ஆசிரியர்களுக்கும் சரி , பெற்றோருக்கும் சரி , சமூக இயக்கங்களுக்கும் சரி , மாணவர்களின் மதிப்பெண்கள்தான் முக்கியம். மேகி மீ, முட்டை  உடனடி உணவாவதற்கு ஏதுவாக இருப்பது போல , உடனடி மதிப்பெண்களைப் பார்க்க  வேண்டும் அவர்களுக்கு. பெற்றோரிடையே நடக்கும் யார் பிள்ளை சிறந்தவன் என்ற பனிப்போரே இதற்கு முக்கியக் காரணம். பயிற்சி- பரீட்சை-மதிப்பெண்கள் என்ற ரீதியில் கற்றல் கற்பித்தல் சுருங்கிக் கிடக்கிறது. இந்தப் போக்கு கூண்டுப் பறவைகளைப்போல  பிள்ளைகளை  பழக்கி வளர்ப்பதற்கு ஈடானது. காட்டில் சிறகடித்துப் பறக்கும் பறவையாக , காட்டின் சுவாசத்தை உள்வாங்கிய பறவையாக, காட்டோடு காடாக அனுபவித்து வாழும் பறவையாக வளர்க்கத் தவறிவிட்டோம். இந்தப் பயிற்சி- பரீட்சை- மதிப்பெண்கள் என்று குறுகிய வட்டச் சிந்தனை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கத் தவறிவிட்டது. வாசிப்பினால் உடனடி பலன் கிடைக்காது என்று குறுகிய சிந்தனை வள்ர்ந்துவிட்டது. தீவிர வாசிப்பு சிந்தனையை அகலத் திறந்து விடும் கற்பிதத்தை அறியாத சமூகத்தைத்தான் இப்போது பார்க்க முடிகிறது. சிந்திக்காத சமூகம் முன்னேறுமா? கண்டிப்பாய் முன்னேறாது. மலேசிய இந்தியரிடையே இதனை தெளிவாகப் பார்க்க முடிகிறது.  நம் பெற்றோருக்கு உடனடி மதிப்பெண்கள் முக்கியமாகி, எதிர்கால வாழ்வு பற்றிய  பிரக்ஞையற்ற நிலையும்,   தூரநோக்கும் இல்லாத நிலை நமக்குக் கவலையளிக்கிறது.

Vanathevathai novel

கேள்வி: சரி… உங்கள் சிறுவர் நாவல் ‘வன தேவதை’ பற்றிச்சொல்லுங்கள்.

இதன் முக்கிய சாராம்சம் சூழியல் அறிவை உண்டாக்குதல். நமக்கு காடு எவ்வளவு அவசியம் என்பதை நிறுவிச்செல்கிறது. அதோடு உயர் நிலை சிந்தனையைத் தூண்டும் அம்சங்களும் நிறைந்திருக்கிறது. இன்றைக்கு உயர் நிலைச் சிந்தனையுடைய மாணவர்களை உருவாக்கும் கல்வி, போதனையில் பரவலாக்கப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் கதை ஓட்டத்தில்  வருபவை. ஆனாலும் நாவலின் அடிநாதம் அதன் விறூவிறுப்பான கதையில் இருக்கிறது. ஒரு ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களைக் காட்டின் முக்கியத்தவத்தை உணர்த்த வனவுலாவுக்குக் கொண்டு செல்கிறார். அத் தருணத்தில் ஒரு மாணவன் காட்டில் காணாமற்போகிறான். அவன் எப்படி சுய சிந்தனையைப் பயன் படுத்து காட்டிலிருந்தும் கொடிய மிருகங்களின் தாக்குதல்களிலிருந்தும் தப்பித்து வெளியேறுகிறான் என்பதே கதையின் மையப்பொருள். அவன் கற்ற அறிவியல், சூழியல் பாடங்கள் அவனுக்கு எவ்வாறு அந்த இக்காட்டான கணத்தில் பயன் படுகிறது என்பதையும் சொல்லிச் செல்கிறேன். காட்டில் அவன் சந்திக்கும் ஆபாயங்களே கதையை விறுவிறுப்பு குறையாமல் வாசிக்க வைக்கும் உத்தியைக் கையாண்டிருக்கிறேன்.

கேள்வி:  நூலைப் பார்த்தவுடன் மாணவர்களை ஈர்க்கும் அம்சங்கள் ஏதும் உண்டா?

பதில்: கண்டிப்பா உள்ளது. கதைக்குப் பொறுத்தமான வண்ண ஓவியங்களை அத்தியாயத்துக்கு அத்தியாயம் சேர்த்த்திருக்கிறேன். நூல் கைக்கு அடக்கமான வடிவம் கொண்டுள்ளது. பேருந்தில், காரில் பயணம் செய்யும் போதும். காத்திருக்கும் தருணங்களிலும் வாசிக்க ஏதுவான வடிவம் அது. 118 பக்கங்கள் கொண்டது. நூலின் விலை ஏழு ரிங்கிட்தான். நூலை வாங்க விரும்பும் பள்ளிகள் என்னோடு தொடர்பு கொள்ளலாம். 10 நூல்களுக்குக் குறையாமல் வாங்கினால்தான் அனுப்பும் செலவை ஈடுகட்ட முடியும். அதில்லாமல் தாங்கள் படித்த முன்னால் பள்ளிக்கு இந்நூலை அன்பளிப்பாக வழங்க விரும்பும் முன்னால் மாணவர்களும் என்னோடு தொடர்பு கொள்ளலாம். என் தொலைபேசி எண் 0195584905.

-ஃபீனிக்ஸ்தாசன்