சென்னை – இலக்கியமாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி பொது மேடையில் நினைத்ததை தைரியமாக பேசும் துணிச்சல் சினிமா நடிகர்களில் கமல் உள்ளிட்ட ஒரு சிலருக்கே உண்டு. பக்குவப்பட்ட பேச்சின் மூலம் பார்வையாளர்களை கவரும் கமலே ஒருமுறை தனது பேச்சின் மூலம் மிகப் பெரிய பின்விளைவை சந்தித்தார்.
முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் ஏற்பாடு செய்திருந்த மேடை ஒன்றில் பேசிய கமல், “வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வேண்டும்” என்று எதார்த்தமாகக் கூறப்போய் அவர் ஆளும் தரப்பின் கோபத்திற்கு ஆளானார்.
ஆளும் கட்சியின் கோபமா? அல்லது இஸ்லாமியர்களின் எதிர்ப்பா? என்று பிரித்துக் கூற முடியாதபடி மிகப் பெரிய எதிர்ப்பலைகளை சந்தித்து தான் விஸ்வரூபம் படம் கரை கடைந்தது. இந்நிலையில், அதே போன்ற சம்பவம் மீண்டும் திரும்புவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை இதற்கு ஏற்பாடு செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. ஆனால் இதற்கு பின்னணியில் திமுக தலைவர் இருப்பதாகவே கூறப்படுகிறது.
‘இந்திய இலக்கியத்தில் தமிழின் உச்சம்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதை நூல் வெளியீட்டு விழா, வரும் 10-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இலக்கியத்தில் ஆர்வமுள்ளதாலும், வைரமுத்துவிடம் கொண்ட நட்பின் காரணமாகவும் கமல் இந்த விழாவில் கலந்து கொள்கிறார் என்று பொதுவாக கூறப்பட்டாலும், இந்த மேடையை திமுக தலைவர் கருணாநிதி வெறும் இலக்கிய மேடையாக மட்டும் பார்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து ஒருவேளை கருணாநிதி நினைவு கூர்ந்து, அது குறித்து கமல் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டால் கண்டிப்பாக அது ஆளும் தரப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஒருவேளை அதனால் தூங்காவனம் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினால் கமலும் அதனை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார். விஸ்வரூபம் விவகாரத்தில் ஊடகங்கள் முன் கமல் கண்கலங்கி நிற்பதை பார்த்து ஆளும் தரப்பிற்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. அது போன்ற ஒரு நிகழ்வைத் தான் எதிர் தரப்பு தற்போது ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.
எனினும் இதுபோன்ற அரசியலை எல்லாம் கமல் மிக எளிதாக கையாள்வார் என கமல் வட்டாரங்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும், வரும் 10-ம் தேதி கமல், கருணாநிதி பங்குபெறும் இலக்கிய கூட்டம் மீது தான் தற்போது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது.