கோலாலம்பூர் – எஸ்டி புவனேந்திரன் இயக்கத்தில் ஹரிதாஸ், அஸ்ட்ரோ குமரேசன், டேனிஸ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி, சீலன், புஷ்பா நாராயண், லோகநாதன், மனோ ஷான் உள்ளிட்ட முன்னணி மலேசிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாயிருக்கும் ‘மறவன்’ திரைப்படம் இன்று முதல் நாடெங்கிலும் 24 திரையரங்குகளில் வெளியாகின்றது. பட்டியலை கீழேயுள்ள படத்தில் காணலாம்.
வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் மலேசிய சினிமாத் துறையின் முக்கியமான காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் தரமான இயக்கத்தில், விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என நம்பப்படுகின்றது.
இத்திரைப்படத்தின் வெற்றி மலேசிய சினிமாத்துறைக்கு ஒரு மைல் கல்லாக அமையும். இப்படத்தின் வெற்றியின் மூலம் பல உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்பாளர்களின் வருகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் 2016-ம் ஆண்டு மலேசிய சினிமாத்துறைக்கு குறிப்பாக மலேசிய இந்தியக் கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும். பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பும், அதன் மூலம் பல தரமான திரைப்படங்களும் உருவாகும்.
மலேசிய சினிமாத்துறையில், தரமான படங்கள் இல்லை, செயற்கையாக நடிக்கிறார்கள், நாடகத்தனமாக உள்ளது என்று முன்னொரு காலத்தில் ரசிகர்களிடையே ஒரு கண்ணோட்டம் நிலவி வந்தது. அதன் காரணமாக, நல்ல கதையம்சங்களுடன் வெளிவந்த பல மலேசியத் திரைபடங்களை திரையரங்கில் சென்று காண்பதை மக்கள் தவிர்த்து வந்தார்கள்.
அந்தச் சூழல் இப்போது இல்லை. அண்மையக் காலத்தில் வெளிவந்த தரமான படங்களால் மலேசியத் தமிழ் திரைப்படங்களின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. கருத்துள்ள கதையும், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய அளவில் ஆபாசமில்லாத உண்மையான காதலும், இரட்டை அர்த்த வசனங்கள் கலக்காத நகைச்சுவையுடன் கூடிய விறுவிறுப்பான கதையாக ‘மறவன்’ உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று வெளியாகும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு களித்து மாபெரும் வெற்றிப்படைப்பாக ஆக்க வேண்டியது மலேசிய திரைப்பட ரசிகர்களின் கடமை என்று கூட சொல்லலாம்.
‘மறவன்’ மாபெரும் வெற்றியடைய செல்லியலின் வாழ்த்துகள்!
– ஃபீனிக்ஸ்தாசன்