Home One Line P2 ஆப்பிள் மதிப்பு 2 டிரில்லியன் – டிம் குக் மதிப்பு என்ன தெரியுமா?

ஆப்பிள் மதிப்பு 2 டிரில்லியன் – டிம் குக் மதிப்பு என்ன தெரியுமா?

907
0
SHARE
Ad

நியூயார்க் – ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் காலமாகி 9 ஆண்டுகள் கடந்து விட்டன. அவருக்குப் பின்னர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் டிம் குக்.

ஓரினச் சேர்க்கையாளராகப் பகிரங்கமாக அறியப்பட்டவர் டிம் குக். என்றாலும் அந்த சர்ச்சை அவரது வளர்ச்சியையோ, ஆப்பிளின் வளர்ச்சியையோ எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

கடந்த 9 ஆண்டுகளில் முன்பிருந்ததை விட பன்மடங்கு அதிகமாக சந்தை மதிப்பில் உயர்ந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். 44 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூட்டாகத் தோற்றுவிக்கப்பட்டது இந்நிறுவனம்.

#TamilSchoolmychoice

இன்று அதன் மதிப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர். ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன் டாலர். ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன். தலை சுற்றுகிறதா? உத்தேசமாக நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்!

ஜாப்ஸ் விட்டுச் சென்றபோது ஆப்பிளின் சந்தை மதிப்பு வெறும் 350 பில்லியன் டாலர்கள்தான்! இப்போது உங்களுக்கே கணக்குப் போட்டுப் பார்க்க முடியும். எந்த அளவுக்கு ஆப்பிள் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று!

இதைத் தொடர்ந்து டிம் குக் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களாக இன்றைக்கு மதிப்பிடப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

பொதுவாக ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, அதன் தலைமைச் செயல் அதிகாரிகளாக செயலாற்றுபவர்கள்தான் பில்லியனர்களாக சொத்து மதிப்பில் உருவெடுப்பார்கள்.

அமேசோன் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ், பேஸ் புக்கின் மார்க் சக்கர்பெர்க் ஆகியோர் இத்தகைய பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவார்கள்.

ஆனால் டிம் குக் இதில் விதிவிலக்கு. ஆப்பிளின் தலைமைச் செயல் அதிகாரியாக மட்டும் இருந்து கொண்டு பில்லியன் டாலர் சொத்துகளைக் கொண்ட பணக்காரர்கள் குழாமில் இணைந்துள்ளார் டிம் குக்.

இதைப் போன்ற மற்றொரு உதாரணம் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையாவார்.

59 வயதான டிம் குக், தலைமைச் செயல் அதிகாரி என்ற முறையில் மில்லியன் கணக்கான ஆப்பிள் பங்குகளையும் உரிமையாளராகக் கொண்டுள்ளார்.

அவரது சொத்துகளில் பெரும் பகுதியையும், தனது ஆப்பிள் பங்குகளையும் அறப் பணிகளுக்கு வழங்கியிருப்பதாக குக் 2015-ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார்.

ஆனால் அவர் எவ்வளவு சொத்துகளை அறப்பணிகளுக்கு வழங்கியிருக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதன்படி அவர் தனது சொத்துகளை வழங்கியிருந்தால் அவரது சொத்தின் மதிப்பு மேலும் குறையலாம்.

1998-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய டிம் குக் தொடர்ந்து குறிப்பிட்ட தவணக்கு ஒருமுறை ஆப்பிள் பங்குகளை தனது பணித் திறனுக்காகப் பெற்று வந்தார்.

இந்த மாத இறுதியில் மேலும் 560,000 ஆப்பிள் பங்குகளை டிம் குக் பெறுவார்.

அதன் மதிப்பு சுமார் 252 மில்லியன் டாலர்களாகும். இதில் பாதியளவு வரி செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டாலும் டிம் குக்கின் சொத்து மதிப்பு மேலும் 100 மில்லியன் டாலருக்குக் கூடுதலாக உயரும்.

தற்போது டிம் குக் நேரடியாக 847,969 பங்குகளைக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவரது சொத்து மதிப்பு 650 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

தற்போது ஆப்பிள் பங்கு ஒன்றின் விலை 450 அமெரிக்க டாலர் என்பதைக் கணக்கில் வைத்துப் பார்த்தால், டிம் குக் சொத்தின் மதிப்பை ஓரளவுக்கு நாமே கணித்துக் கொள்ள முடியும்.

ஆகஸ்ட் 2011-இல் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் காரணமாகத் தனது பொறுப்புகளில் இருந்து விலகியபோது அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு இடைக்காலமாக நியமிக்கப்பட்டார் டிம் குக்.

பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமான பின்னர் நிரந்தரமாக தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 9 ஆண்டுகளில் உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக ஆப்பிள் நிறுவனத்தை உருமாற்றியிருக்கிறார் டிம் குக்.