நியூயார்க், நவம்பர் 1 – ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தான் ஓரினச் சேர்க்கை கொள்வதில் பெருமை அடைவதாகவும், அது கடவுள் கொடுத்த பரிசு என்றும் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குக், அமெரிக்காவின் பிரபல பொருளாதார வார இதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
“நான் ஓரினச் சேர்க்கை கொள்வதில் பெருமை அடைகிறேன். இது குறித்து நான் வெளிப்படையாகக் கூறுவதால், என்னை போன்று உள்ள பலரும் தங்களது தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவர் என்று நம்புகிறேன். நான் எப்பொழுதும் சமத்துவத்திற்காக பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பொது நிகழ்ச்சி ஒன்றின் போது இது தொடர்பாக கூறுகையில், “நான் எனது உணர்வை வெளிப்படுத்துவதில் எப்போதும் தயங்கியது இல்லை. நான் ஓரினச்சேர்க்கையாளர் என்பது, என்னுடன் பணியாற்றும் பலருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் என்னிடம் எந்த விதத்திலும் வித்தியாசமாக நடந்து கொள்வதில்லை.
எனது சுய உணர்வுகளைப் பிறரிடம் கூறாமல் இருப்பதால் எனது முக்கியமான பல வேலைகள் தடைபடுவதை உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து தான், நான் என்னை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
டிம் குக்கின் இந்த வெளிப்படையான பேச்சு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர், பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களிலும் பலர் டிம் குக்கை பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.