Home படிக்க வேண்டும் 2 ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்!

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்!

762
0
SHARE
Ad

maran_dayanidhiபுதுடெல்லி, நவம்பர் 1 – ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட எட்டு பேருக்கு சம்மன் பிறப்பித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சாய்னி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நேரில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எட்டு பேருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி.சாய்னி, எதிர்வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதியன்று இவர்கள் எட்டு பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், மலேசியன் மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ரால்ப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சென்னையின் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டி, சிவசங்கரனின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

அதற்கு கைமாறாக மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து சன் டைரக்ட் நிறுவனம் கிட்ட தட்ட 599 கோடி ரூபாய் முதலீடு பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அது தொடர்பில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்ததில் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி அன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 72 பக்க குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.