Home One Line P2 1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்

1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்

1204
0
SHARE
Ad

நியூயார்க் – அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் எந்த நிறுவனம் அதிக மதிப்புடையது என்பதையும், எந்த நிறுவனம் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உருவெடுக்கிறது என்பதையும் ஆராய்வதுதான் அமெரிக்க வணிக ஆய்வாளர்களின் பணிகளில் ஒன்று.

அந்த வகையில் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவதாக இடம் பிடித்திருக்கிறது அல்பாபெட் – அதாவது கூகுள் நிறுவனத்தின் உரிமையாளரான தாய் நிறுவனம்.

ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனமும், மைக்ரோசோப்ட் நிறுவனமும் 1 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதில் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாக ஆப்பிள் கணிக்கப்படுகிறது. ஏறத்தாழ 1.4 மில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது நிலையில் இருக்கும் மைக்ரோசோப்டின் மதிப்பு 1.3 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 16) அமெரிக்கப் பங்குச் சந்தையில் அல்பாபெட்டின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்திருப்பதைத் தொடர்ந்து மூன்றாவது 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக அல்பாபெட் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறது.

1 டிரில்லியன் மதிப்பைக் கொண்டிருக்கும் இந்த மூன்று நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களாகும்.

ஆனால் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாகத் திகழ்வது சவுதி அரேபியாவில் அரசு எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ ஆகும். இதன் மதிப்பு தற்போது 1.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

கடந்த 2018 செப்டம்பரில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பைத் தொட்ட அமேசோன் நிறுவனம் தற்போது 930 மில்லியன் டாலர் மதிப்பையே கொண்டிருக்கிறது.
2020-ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே அல்பாபெட் பங்குகளின் விலைகள் உயர்வு கண்டு இதுவரையில் 8 விழுக்காடு வரையில் உயர்வு கண்டிருக்கின்றன.
அல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகக் கடந்த ஆண்டில் பொறுப்பேற்ற சுந்தர் பிச்சையின் தலைமைத்துவத்திற்கு கிடைத்திருக்கும் மற்றொரு மகுடமாக அல்பாபெட் 1 டிரில்லியன் டாலர் நிறுவன வரிசையில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது.