சான் பிரான்சிஸ்கோ – அண்மையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (1,000 பில்லியன் டாலர்) சந்தை மதிப்புடைய நிறுவனமாக வரலாற்றில் இடம் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அத்தகைய மதிப்பைத் தொடும் இரண்டாவது நிறுவனமாக அமேசான் சாதனை புரிந்திருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னால் இணையம் வாயிலாக நூல்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மக்களுக்கு அறிமுகமான அமெரிக்க நிறுவனமான அமேசானின் பங்கு விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி அமெரிக்கப் பங்குச் சந்தையில் அதன் மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவர் தனது பெற்றோர்களிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு 1994-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஜெப் பெசோஸ் கருதப்படுகிறார். உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டியலில் பில் கேட்சை ஜெப் முந்திவிட்டார் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அமேசானின் வெற்றிக்கான காரணமாக வணிக நிபுணர்கள் கருதுவது அந்நிறுவனத்தின் வணிக சித்தாந்தத்தைத்தான். ஆரம்ப காலங்களில் இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கருதாமல் சம்பாதித்த அனைத்து வருமானத்தையும் அமேசான் நிறுவனத்தை வளர்ப்பதிலும், விநியோகத்தைக் கட்டமைப்பதிலும், கொள்இட வசதிகளை (warehouses) விரிவாக்குவதிலும், தரவு மையங்களை மேம்படுத்துவதிலும் அமேசான் செலவிட்டது.
இதன் மூலம் இலாபம் அடைவது என்பதைவிட நிறுவன வளர்ச்சி ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்பட்டதுதான் அமேசானின் வெற்றிக்கானக் காரணம் என வணிக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.