
புத்ரா ஜெயா – புதிய பக்காத்தான் அரசாங்கத்தில் 4 இந்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சிதான்! வரலாற்றுபூர்வ, பெருமைக்குரிய செய்திதான்! ஆனல், அதே சமயத்தில் சில நெருடல்களும் எழாமல் இல்லை.
நேற்று புதன்கிழமை பிரதமர் துன் மகாதீர் முன்னிலையில் 23 அரசியல் செயலாளர்கள் பதவி ஏற்றனர் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பதுதான் அந்த நெருடல்!
பொதுவாக ஒவ்வொரு அமைச்சருக்கும் ஓர் அரசியல் செயலாளர் நியமிக்கப்படுவார். மிக முக்கியமான அரசு பதவி இது. துணையமைச்சருக்கு இணையான இந்தப் பதவியில் இருப்பவருக்கு துணையமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக, சம்பளமும், இதர பல செலவினங்களுக்கான சலுகைகளும் வழங்கப்படும்.
மஇகா அமைச்சர்கள் இருந்த காலத்தில் அவர்களுக்கு இந்தியர்களே அரசியல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தப் பதவியின் மூலம் பலர் அரசியல் அனுபவத்தைப் பெற்றனர் என்பதோடு, அரசியல் பாதையில் காலடி எடுத்து வைக்கவும் பலருக்கு அரசியல் செயலாளர் பதவி நுழைவாயிலாக அமைந்தது.
ஆனால், நேற்று நியமிக்கப்பட்ட 23 அரசியல் செயலாளர்களில் யாருமே இந்தியர்கள் இல்லை என்பதோடு, மனித வள அமைச்சராக இருக்கும் எம்.குலசேகரனுக்குக் கூட அரசியல் செயலாளராக சீன சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிட்டத்தக்க வேண்டியதாகும்.
இன பேதமின்றி இந்தியர் ஒருவருக்கு சீனர் ஒருவரோ, மலாய்க்காரர் ஒருவரோ அரசியல் செயலாளராக நியமிக்கப்பட வேண்டியது வரவேற்கப்பட வேண்டியதுதான்! ஆனால் அதேபோல மலாய் அல்லது சீன அமைச்சர் ஒருவருக்கு இந்தியர் ஒருவர் யாராவது அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறாரா என்றால் நமக்குக் கிடைக்கும் விடை அப்படி யாரும் இல்லை என்பதுதான்!
அறிவிக்கப்பட்ட அரசியல் செயலாளர்களின் பட்டியலில் கோபிந்த் சிங் டியோ, டாக்டர் சேவியர் ஜெயகுமார், பி.வேதமூர்த்தி ஆகிய அமைச்சர்களின் அரசியல் செயலாளர்களாக யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எனவே, இவர்களாவது இந்தியர்களை அரசியல் செயலாளர்களாக நியமிப்பார்களாக என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
-இரா.முத்தரசன்