Home One Line P2 ஆப்பிளை விட அதிக மதிப்புடைய நிறுவனமாக உருவெடுக்கிறது சவுதி அராம்கோ

ஆப்பிளை விட அதிக மதிப்புடைய நிறுவனமாக உருவெடுக்கிறது சவுதி அராம்கோ

1043
0
SHARE
Ad

ரியாத் – உலகின் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக தற்போது திகழ்ந்து வருவது ஆப்பிள் நிறுவனம். ஆனால், தற்போது தனது பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட முனைந்திருக்கும் சவுதி அரேபியாவின் ஏகபோக எண்ணெய் உரிமங்களைக் கொண்ட அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஆப்பிளை விட அதிக மதிப்புடைய நிறுவனமாக அராம்கோ உருவெடுக்கிறது. ஆப்பிளின் மதிப்பு ஏறத்தாழ 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியனாகும். (ஒரு பில்லியன் என்பது 1,000 மில்லியன்)

#TamilSchoolmychoice

அராம்கோவை 2 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிட வேண்டும் என சவுதி அரேபியாவின் ஆட்சியாளர் இளவரசர் சல்மான் விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நடப்பு எண்ணெய் விலைகள், பருவநிலை மாற்றங்கள், உலகளாவிய நிச்சயமற்ற நடப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அராம்கோ நிறுவனம் 1.7 டிரில்லியனாக மட்டும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

200 பில்லியன் பங்குகளைக் கொண்டிருக்கும் அராம்கோ அதில் 1.5 விழுக்காட்டு பங்குகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க முன்வந்துள்ளது. இதில் 0.5 விழுக்காட்டுப் பங்குகள் தனிநபர்களுக்கும் ஒரு விழுக்காட்டுப் பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும். ஒரு பங்கின் விலை 30 ரியால் (8 அமெரிக்க டாலர்) முதல் 32 ரியால் வரை (அமெரிக்க டாலர் 8.53) விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

உலகிலேயே அதிக இலாபம் ஈட்டும் நிறுவனமாகத் திகழும் அராம்கோ 2018-இல் 111 பில்லியன் டாலர் இலாபத்தை ஈட்டியது. 2024 வரையிலான காலகட்டத்தில் அராம்கோ பங்குதாரர்கள் 75 பில்லியன் டாலர் இலாப ஈவுத் தொகையைப் பெற முடியும் என அராம்கோ உறுதியளித்திருக்கிறது.

இதுவரையில் வெளியிடப்பட்ட பொது பங்கு விநியோக வரிசையில் மிகப் பெரியதாகப் பார்க்கப்பட்டது சீனாவின் அலிபாபா நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதாகும். அதைவிட பெரிய அளவிலான பொது பங்கு விநியோகத்தை அராம்கோ கொண்டிருக்கிறது. இதன் மூலம் 25 பில்லியன் டாலர் நிதியைத் திரட்ட அராம்கோ திட்டமிட்டிருக்கிறது. அலிபாபா திரட்டிய நிதியை விட இது அதிகமானதாகும்.

அராம்கோ பொதுவில் பங்குகளை விற்பனை செய்வது இதுவே முதன் முறையாகும்.