நியூயார்க் – ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள ஒரு சாதாரண வீட்டில், பயன்படுத்தப்படாத சாமான்கள் வைக்கப்படும் பின்புறப் பகுதியில் தொடங்கப்பட்ட கூகுள் இன்று பில்லியன் கணக்கான டாலர் மதிப்பில் உலகின் முதல்நிலை தொழில்நுட்ப நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
கூகுள் நிறுவனத்தைத் தொடக்கியவர்கள் லேரி பேஜ், செர்ஜி பிரின் என்ற இருவர். கூகுளின் தாய் நிறுவனமாகச் செயல்பட்டு வரும் அல்பாபெட் (Alphabet) நிறுவனத்தில் இதுவரையில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து வருபவர்கள் இந்த இருவரும்தான்.
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக மட்டும் செயல்பட்டு வந்தார்.
ஆனால், நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) முதல் தங்களின் நிர்வாகப் பொறுப்புகளை லேரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் துறந்துள்ளனர். லேரி பேஜ் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்தும், செர்ஜி பிரின் வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளனர்.
தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையே கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அல்பாபெட் – கூகுள் குழுமத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஆதிக்கமும் தற்போது சுந்தர் பிச்சையின் கரங்களில் வந்து சேர்ந்துள்ளது.
இதன் மூலம், இந்த நிறுவனங்கள் தொடர்பாக சுதந்திரமாக முடிவெடுத்துச் செயலாக்கக் கூடிய பெரும் பொறுப்பு சுந்தர் பிச்சையின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் லேரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் தொடர்ந்து இந்த நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்தில் இடம் பெற்றிருப்பர் என்பதோடு, பங்குதாரர்கள் என்ற முறையில் வாக்களிக்கும் அதிகாரத்தையும் தொடர்ந்து கொண்டிருப்பர்.