Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய iOs 7 ஐ-போன்களில் தமிழ்! முதன் முறையாக விசைகளுடன் தமிழ் உள்ளீடுகள்!

புதிய iOs 7 ஐ-போன்களில் தமிழ்! முதன் முறையாக விசைகளுடன் தமிழ் உள்ளீடுகள்!

1960
0
SHARE
Ad

iPhone-Featureசெப்டம்பர் 11 – நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரக ஐ-போன்களில் முதன் முறையாக தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது நவீன செல்பேசி யுகத்தில், தமிழ் உலகம், வரலாற்றில் பதிவு செய்யக் கூடிய ஒரு மறக்க முடியாத திருப்பு முனையாகும்.

#TamilSchoolmychoice

இதுவரை வெளிவந்துள்ள திறன்பேசிகளில் (smart phone) நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட iOS 7 எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் செல்பேசிகளில்தான் விசைத் தட்டுடன் (keyboard)  கூடிய தமிழ் இயங்குதளம் அதன் மென்பொருளிலேயே சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது என்பதும் இதன்மூலம் தமிழ் விசைகளை நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றமாகும்.

இனி ஐபோன்களிலும் “முரசு அஞ்சல்” விசைத்தட்டுimage

புதிய ஐ-போன் ரகங்களில் “தமிழ் 99” மற்றும் “முரசு அஞ்சல்” விசைத் தட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. பயன்படுத்துபவர்கள் இந்த இரு விசைத்தட்டுக்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் தமிழ் மொழி எழுத்துக்களை பதிவு செய்யலாம். ஐபோன்கள், ஐபேட் (iPad) எனப்படும் தட்டைக் கருவி, ஐபோட் (iPod) கருவிகள் என இனி எல்லா கருவிகளிலும் இந்த முறையில் தமிழைப் பயன்படுத்தலாம்.

இதற்கு முன்பாக தமிழுக்கென உருவாக்கப்பட்ட சில குறிப்பிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும், அல்லது மற்ற திரைப்பக்கங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை வெட்டி எடுத்து ஒட்டுவதன் மூலமும் அல்லது ஆங்கில எழுத்துக்களின் மூலமாகவும்தான் செல்பேசிகளிலும், தட்டைக் கருவிகளிலும்,  தமிழைப் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது.

இத்தகைய செயலிகளின் பயன்பாட்டில் செல்லினம் என்னும் செயலிதான் இதுவரையிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐ-போன்களில் தமிழ் விசைத்தட்டு அதன் உள்ளேயே மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இனி மற்ற செயலிகளைப் பதவிறக்கம் செய்துதான் தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. வெட்டி ஒட்டும் வேலையும் இல்லை.

எனவே இனி நேரடியாகவே ஐபோன்களில், ஐபேட் போன்ற தட்டைக் கருவிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி குறுந்தகவல்கள் அனுப்பலாம். மேலும், ஃபேஸ் புக் எனப்படும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்எப் (Whatsapp), வைபர் (Viber) போன்ற இணையத் தள செயலிகளில் செய்திகள், தகவல்கள் அனுப்பலாம்.

அதே வேளையில், இணையத் தளங்களில் தேடலுக்கு (search) நேரடியாகவே தமிழ் மொழியில் உள்ளடக்கங்களைத் தேடலாம். முகவரிகள், பெயர் பட்டியல்களில் தமிழிலேயே பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு விருப்பமான தமிழ்ப் பாடல்களை தமிழிலேயே தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி எல்லாவற்றிலும், ஐபோன்களில் இருக்கும் எல்லா திரைப்பக்கங்களின் (screen) மூலமாகவும் தமிழைப் பயன்படுத்தலாம்.

செல்லினம் பயன்பாடு அப்படியே இனி ஐபோன்களில்….

06MP_VAIRAMUTHU2_1104406gஇதற்கு முன்பாக அண்ட்ரோய்ட் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் செல்பேசிகளில் செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன்மூலம் குறுந்தகவல் பரிமாற்றங்கள் 2012ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தன. செல்பேசிகளில், முதன் முறையாக அனைத்துச் செயல்களுக்கானதமிழ் உள்ளீட்டு முறைமை (a system-wide input method) செல்லினம் மூலம் பயன்பாட்டுக்கு வந்தது.

தமிழ் மொழியை நவீன தொழில் நுட்ப யுகத்தில் புகுத்தும் மிக முக்கியமான அடுத்த கட்ட முன்னேற்றமாக செல்லினம் இன்றுவரை கருதப்படுகின்றது.

செல்லினம் குறித்து அதன் அறிமுகத்தின் போது கருத்து தெரிவித்த கவிப் பேரரசு வைரமுத்து “தமிழில் இதுவரை மெல்லினம், இடையினம், வல்லினம் என மூன்று வகை. இனி செல்லினம் என்பது நான்காவது வகை” எனப் பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்து பயனீட்டாளர்கள் இதுவரை செய்து வந்த அனைத்து செயல்பாடுகளையும் இனி புதிய ஐபோன்களில் எந்தவித செயலிகளையும் பதிவிறக்கம் செய்யாமலேயே நேரடியாகவே இனி பயன்படுத்த முடியும் என்பதுதான் புதிய ரக ஐபோன்களின் மூலம் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றமாகும்.

தொழில் நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனின் கருத்து

muthu-nedumaranசெல்லினம் செயலியை ஐஓஎஸ் மற்றும் அண்ட்ரோய்ட் மென்பொருள் தளங்களில் வடிவமைத்தவர் நமது மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ரக iOS 7ஐபோன்களிலும் தமிழ் மொழியையையும் மற்ற இந்திய மொழிகளையும் வடிவமைத்தவர் நமது முத்து நெடுமாறன்தான் என்பதும் நமக்கெல்லாம் பெருமைக்குரிய தகவலாகும்.

முரசு அஞ்சல் மென்பொருளையும் வடிவமைத்தவரான முத்து நெடுமாறன்தான், நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் “செல்லியல்” என்ற இணைய மற்றும் செல்பேசி  செய்தித் தள செயலின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

ஐபோன்களின் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது குறித்து செல்லியலுக்கு பிரத்தியேகமாக தனது கருத்துரையை வழங்கிய  முத்து நெடுமாறன் பின்வருமாறு கூறினார்:

“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற முறையில் இது நமக்கெல்லாம் உற்சாகமூட்டக்கூடிய ஒரு முன்னேற்றமாகும். தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் விசைத் தட்டுக்களுடன், மிக அழகான வடிவமைப்பில் தமிழ் எழுத்துக்கள் புதிய ஐபோன்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கருவிகளில் தமிழைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் சுலபமாகவும், மகிழ்ச்சியாகவும்  இருக்கின்றது.”

“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் உலகம், இந்த அற்புதமான கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழை செல்பேசிகளிலும் தட்டைக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படுத்துவதோடு, தமிழிலேயே தகவல்களையும், செய்திகளையும், உள்ளடக்கங்களையும் உருவாக்க வேண்டும், பரிமாற்றங்களும் செய்ய வேண்டும்  என கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அப்போதுதான், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடும், தமிழை உள்ளீடு செய்வதும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்”

-மேற்கண்டவாறு முத்து நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபோன்களில் தமிழ் மொழி குறித்த அதிகாரபூர்வ தகவல்களை கீழ்க்காணும் இணையத் தள தொடர்பின் மூலம் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

http://www.apple.com/iphone-5s/specs/

ஐபோன்களில் தமிழ் என்ற வரலாற்று பூர்வமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இன்று, செப்டம்பர் 11ஆம் நாள் – நமது மகாகவி பாரதியாரின் நினைவு நாளாகும்.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” எனப் பாடிய – நமது தமிழ் கூறு நல்லுலகம் என்றுமே தனது நினைவில் வைத்திருக்கும் – காலத்தை வென்ற அந்த மகா  கவிஞன் –  இன்று மட்டும் நம்மிடையே வாழ்ந்திருந்தால்….

“இதுதான் யுகப் புரட்சி” என்று நிமிர்ந்த நெஞ்சோடும், நேர் கொண்ட பார்வையோடும், மீசை முறுக்கிப் பாடியிருப்பானோ?

நினைக்கவே மெய்சிலிர்க்கின்றதல்லவா?

-இரா.முத்தரசன்