Home நாடு “போலி தகவல்களை வெளியிடுமாறு காவல்துறை எனக்கு நெருக்குதல் கொடுக்கிறது” – சஞ்சீவன் கூறுகிறார்

“போலி தகவல்களை வெளியிடுமாறு காவல்துறை எனக்கு நெருக்குதல் கொடுக்கிறது” – சஞ்சீவன் கூறுகிறார்

656
0
SHARE
Ad

sanjeevanspitalபெட்டாலிங் ஜெயா, செப் 11 – தன்னிடம் இருந்த பல ஆதாரங்களை கைப்பற்றிக் கொண்ட காவல்துறை, தன்னை சிக்க வைக்கும் நோக்கில் போலியான தகவல்களைத் தரும் படி நெருக்குதல் கொடுத்து வருவதாக ‘மை வாட்ச்’ அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னை சிக்கவைக்கும் நோக்கில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகம், நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை தலைமையகம், ஜெம்போல் மாவட்ட காவல்துறை தலைமையகம் ஆகியவை இறங்கியுள்ளதாக சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்மிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் கூட்டரசு போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் நோராஷிட் இப்ராஹிமுக்கு நன்கு தெரியும் என்றும் சஞ்சீவன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

போதைப் பொருள் மற்றும் குண்டர் கும்பல் தொடர்பாக தான் வைத்திருந்த அனைத்து தகவல்களையும் காவல்துறை பிடுங்கிக் கொண்டது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், தான் துப்பாக்கி சூட்டிற்கு ஆளாவதற்கு முன்பு நெகிரி செம்பிலான் காவல்துறையைச் சேர்ந்த சிலர் 30 ஆயிரம் வெள்ளி கையூட்டு வாங்கிய தகவலை வெளியிட்டதாகவும் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அனைத்து தகவல்களும் தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காருக்கு தெரிந்தும், அதுபற்றி அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்றும் சஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காலிட், குறைந்தபட்சம் அவர்களிடம் விசாரணையாவது நடத்தியிருக்கலாம் என்றும் சஞ்சீவன் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த சஞ்சீவன், இரண்டு இந்திய ஆடவர்கள் மோட்டார் சைக்கிளில் தன் காரின் அருகில் வந்து பின்னர் அவர்களில் ஒருவன் தம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டது மட்டுமே தமக்கு ஞாபகம் இருப்பதாகவும், சட்டவிரோத சூதாட்டம், போதைப் பொருள் கும்பல் உட்பட என் வாயை மூடுவதற்காக இது காவல்துறையின் வேலையாகக் கூட இருக்கலாம் என்றும் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, நெகிரி செம்பிலானில் உள்ள பாகாவ் சாலை சந்திப்பில், மோட்டாரில் வந்த இருவர் சஞ்சீவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவரது விலாவில் தோட்டாக்கள் பாய்ந்தது. இருப்பினும் சஞ்சீவன் தீவிர மருத்துவ சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார்.