கோலாலம்பூர், செப் 12 – மத்திய அரசாங்கத்தில் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவியேற்று 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், ஹிண்ட்ராப் தேசிய முன்னணியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி (memorandum of understanding) ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆட்சியில் இருந்த இந்த 100 நாட்களில் ஹிண்ட்ராப்பின் செயல்பாடுகள் குறித்த அரசு சாரா இயக்கங்களின் அறிக்கையை (Report Card) வேதமூர்த்தி இன்று வாசித்தார்.
அதன்படி, “தலைவருக்கு(வேதமூர்த்திக்கு) வழங்கப்பட்ட முழு அதிகாரம், 2013 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு, குழுவில் நிபுணர்களை நிர்மாணித்தல், 2014 ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு குறித்து திட்டமிடல் ஆகியவை திருப்திகரமாக இல்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
பக்காத்தானுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஹிண்ட்ராப், தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது.
அதன் பின்னர் வேதமூர்த்தி, மே 5 பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களிக்குமாறு இந்திய சமுதாயத்தை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.