Home அரசியல் ஐந்தாண்டு திட்டவரைவினை செயல்படுத்துவதில் தாமதம் ஏன்? – பிரதமருக்கு பினாங்கு ஹிண்ட்ராப் கேள்வி

ஐந்தாண்டு திட்டவரைவினை செயல்படுத்துவதில் தாமதம் ஏன்? – பிரதமருக்கு பினாங்கு ஹிண்ட்ராப் கேள்வி

517
0
SHARE
Ad

hindrafபினாங்கு, செப்டம்பர் 2 – பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணி செய்து கொண்ட ஹிண்ட்ராபுடனான ஒப்பந்தத்தின் படி மலேசிய இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு செய்யத் தேவையான திட்டங்கள் அனைத்திலும் கால தாமதம் ஏற்படுவது ஏன் என்று பினாங்கு மாநில ஹிண்ட்ராப் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அண்மையில் பினாங்கு மாநிலத்தில் 5 இந்திய இளைஞர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக வேதமூர்த்தி விடுத்த அறிக்கைக்கு எதிராக உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி, பாதுகாப்பு அமைச்சர் ஹிசாமுடின், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகியோர் அவரை பதவி விலகுமாறு கூறியதையும் பினாங்கு மாநில ஹிண்ட்ராப் தலைவரான கே.கலைச்செல்வம் சாடியுள்ளார்.

“ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு வரைவினை ஏற்றுக்கொண்டது ஏன் என்று அம்னோ அமைச்சர்கள் நஜிப்பிடம் கேட்க வேண்டியது தானே?” என்றும் கலைச்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு திட்டவரைவினை ஏற்றுக்கொண்டதால் மே  5 பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவு கொடுத்த மக்கள், இப்போது ஹிண்ட்ராப்புக்கு நெருக்குதல் கொடுக்கிறார்கள் என்றும் கலைச்செல்வம் தெரிவித்துள்ளார்.

“ஐந்தாண்டு திட்ட வரைவினை அமல்படுத்துவதில் இவ்வளவு தாமதம் ஏன்? தேசிய முன்னணித் தலைவரான நஜிப் கொடுத்த வாக்குறுதியை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? தேர்தலின் போது தேசிய முன்னணியின் வெற்றிக்காக ஹிண்ட்ராப் கடுமையாகப் போராடியது” என்று கலைச்செல்வம் கூறியுள்ளார்.

“ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஐந்தாண்டு திட்ட வரைவு அமல்படுத்தவில்லை. இந்திய சமுதாயத்திற்கு இன்னும் எந்த ஒரு வளர்ச்சியையும் நாங்கள் காணவில்லை” என்றும் கலைச்செல்வம் கூறியுள்ளார்.