கோலாலம்பூர், செப். 12- மலேசிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கம், எதிர்வரும் 22.9.2013ஆம் நாள் ஞாயிற்றுகிழமை, நம் நாட்டின் தேசிய தின விழாவை முன்னிட்டு நாடு வளம்பெற மக்கள் நலம்பெற மாபெரும் ஆன்மிகப் பால்குட ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வூர்வலத்திற்கு மேல்மருவத்தூர் சித்தர்பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் எழுந்தருளி பக்தர்களுக்கு நேரடியாக ஆசி வழங்கவுள்ளார்.
20,000 பக்தர்கள் இப்பால்குட ஊர்வலத்தில் கலந்துகொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
அருள்திரு பங்காரு அடிகளார் எதிர்வரும் 19.9.2013ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு மலேசிய விமான நிலையம் வந்தடைவார்.
அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு நல்க ஏற்பாடுகள் செய்யபெற்று வருகிறது.
ஆன்மிக பால்குட ஊர்வலம் காலை 6.00 மணிக்கு கலச வேள்வி பூசைகளோடு தொடங்கி காலை 8.00 மணி அளவில் அண்டாலாஸ், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஊர்வலம் தொடங்கி, கிள்ளான் தெங்கு கிள்ளானா லிட்டல் இந்தியா வழியாக சென்று நகரத் தண்டாயுதபாணி ஆலயத்தில் சென்றடைந்து அங்கு எழுந்தருளியுள்ள இராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 1008, 108 மந்திரங்கள் தமிழில் ஒலிக்க பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
ஊர்வலத்தில் கலந்துகொள்ள கட்டணம் 10 ரிங்கிட், பாலும் குடமும் ஏற்பாட்டாளர்கள் வழங்குவார்கள். பங்கேற்கவிரும்புவோர் இப்போதே பங்கேற்பை உறுதிபடுத்திக்கொள்ளும் படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் ஆன்மிக பால்குடத்தை முன்னிலை வகித்து ஆசி வழங்குவதுடன் அன்று மாலை 6.00 மணிக்கு கண்கவர் கலைப்படைப்புகளோடு நடைபெறவுள்ள “அறம் செய்வோம் ஆயிரம்” எனும் நிகழ்ச்சியிலும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மலேசியாவிலுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களையும் இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் இயங்க தேசிய அமைப்பாக மலேசிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி இயக்கம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் ஆசியோடு தோற்றுவிக்கப்பட்டது.
மேல்மருத்தூர் ஆதிபராசக்தி தொண்டர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த அருள்திரு பங்காரு அடிகளாரின் மலேசியா வருகை, இந்நாட்டில் இயங்கும் ஆதிபராசக்தி மன்றங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் செயல்பட ஒரு பாலமாகவும் அஸ்திவாரமாகவும் அமையும் என இயக்கத்தின் தேசியத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் ப. தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனவே பக்தர்கள் திரளாக வந்து ஆன்மிகப் பால்குட ஊர்வலத்தில் கலந்துகொண்டு அருள்திரு அடிகளாரின் ஆசியையும் அன்னை ஆதிபராசக்தியின் திருவருளையும் பெற்று உய்யுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
பால்குடத்தில் பங்குகொள்ள 019-2716552, 012-2130672, மற்றும் 016-3949265 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.