கோலாலம்பூர், செப் 12 – ஜசெக கட்சியின் பொதுச்செயலாளரும், பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங்கின் சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
இருப்பினும் இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
குவான் எங்கின் டிவிட்டர் வலைத்தளத்தில் இன்று காலை 10.18 மணியளவில், “அடுத்த வாரம் நீ மரணமடைவாய்” என்று ஒரு தகவல் வந்துள்ளது.
பின்னர் அதற்கு பதிலளித்த குவான் எங், “இது ஒரு கொலை மிரட்டல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இது குறித்து காவல்துறையிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“நான் இதற்கு முன்னர் பலமுறை இது போன்ற விஷயங்களுக்கு புகார் அளித்துவிட்டேன். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. எனவே புகார் அளிப்பதும் அளிக்காமல் இருப்பதும் ஒன்று தான் என்று நினைக்கிறேன்” என்று குவான் எங் கூறியுள்ளார்.
மேலும், “நான் எனது வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து விட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை அறிவிக்கிறேன்” என்றும் குவான் எங் கூறியுள்ளார்.
இந்த கொலை மிரட்டலுக்கும், வரும் செப்டம்பர் 29 ம் தேதி நடைபெறவிருக்கும் ஜசெக கட்சியின் மத்திய செயற்குழு மறுதேர்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் லிம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த கொலை மிரட்டலை ஜசெக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.