Home இந்தியா மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு நரேந்திர மோடி இரங்கல்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு நரேந்திர மோடி இரங்கல்

702
0
SHARE
Ad
நரேந்திர மோடி – பங்காரு அடிகளார் சந்தித்துக் கொண்ட கோப்புப் படம்

புதுடில்லி : நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 20) காலமான மேல்மருவத்தூர் சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் சேவைகளை நினைவுபடுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

மக்கள் மீது பரிவு செலுத்தியதோடு, ஆன்மீக செல்வாக்குடன் வலம் வந்தவர் அடிகளார் – அன்னாரின் மறைவால் நான் துயருறுகிறேன் – என மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

பலருக்கு அவர் தொடர்ந்து வழிகாட்டும் ஒளியாகத் திகழ்வார் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார். “மனித சமுதாயத்திற்காக அயராது பாடுபட்ட பங்காரு அடிகளார் கல்விக்காக முக்கியத்துவம் தந்தார். அந்த சேவைகளின் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை விதைகளையும், அறிவாற்றலையும் அவர் விதைத்தார். அடுத்து வரும் எதிர்காலத்தின் பல தலைமுறையினருக்கு அவரின் பணிகள் ஊக்குவிக்கும் உந்து சக்தியாகவும், வழிகாட்டும் அம்சமாகவும் திகழும். அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், அவரைப் பின்பற்றும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என மோடி தன் இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் நேரில் அஞ்சலி

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பங்காரு அடிகளாரின் நல்லுடலுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.”வழிபாட்டு உரிமைகளில் புரட்சி செய்த ஆன்மீகப் பெரியவர் பங்காரு அடிகளார் அவர்களது திருவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்” எனவும் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சமூக ஊடகங்களில் மறைந்த பங்காரு அடிகளாருக்கு இரங்கல் செய்தி ஒன்றைப் பதிவிட்டார்.

“மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் – கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என உதயநிதி தெரிவித்தார்.

ஆலய வழிபாட்டில் புரட்சி செய்த
‘அம்மா’ பங்காரு அடிகளார்

தமிழ் நாட்டின் மிகப் பிரபலமான அம்மன் ஆலயங்களில் ஒன்று மேல்மருவத்தூர் ஆலயமாகும். இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தன் 82-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

சிவப்பு நிற ஆடைகள் அணிந்ததால் அவரின் பக்தர்கள் கொண்ட இயக்கம் செவ்வாடை இயக்கம் என அழைக்கப்பட்டது. மலேசியாவிலும் அவர் பெயரிலான பக்தி இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தன் பக்தர்களால் பங்காரு அடிகளார் அம்மா என்றே அன்புடன் அழைக்கப்பட்டார்.

சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி பங்காரு அடிகளார் புகழ் பெற்றார்.

அவர் நிர்மாணித்த ஆலயத்தில் பெண்களையே ஆலயப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தி அவர் வழிபாட்டு முறைகளில் மாற்றங்களையும் புரட்சியையும் ஏற்படுத்தினார்.