கோலாலம்பூர், செப் 12 – துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து, கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியிருக்கும் ‘மை வாட்ச்’ அமைப்பின் தலைவர் ஆர். சஞ்சீவன், இன்று தனது டிவிட்டர் வலைத்தளத்தில் தனது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அவர் தனது டிவிட்டர் வலைத்தளத்தில், “நான் தற்போது எனது உடல்நிலை முன்னேற்றத்திலும், எனது குடும்பத்தினரின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் எனக்கு பல வழிகளில் அச்சுறுத்தல்கள் வருகிறது. நிறைய பேர் என்னை அமைதியாக்கிவிட முயற்சிக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “காவல்துறை எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை. அதனால் முகமூடி அணிந்த சிலர் எனது வீட்டிற்கு வருகிறார்கள். அது உண்மையில் அச்சப்படும் படியாக இருக்கிறது. எனக்கு காவல்துறையின் பாதுகாப்பு தேவை. காரணம் அடையாளம் தெரியாத கார் மற்றும் மோட்டாரில் சிலர் மர்ம நபர்கள் எனது வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.” என்று தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கும் சஞ்சீவன் அதை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வலைத்தளத்துடன் டேக் (Tagging) செய்துள்ளார்.
இதைப் பார்த்த அன்வார் இப்ராகிம், “அவசரம்” என்று உடனடியாக அதற்கு பதிலளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, சஞ்சீவன் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்,
“காவல் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி சிலரிடம் துப்பாக்கிக்களைக் கொடுத்து, என்னையும், என் குடும்பத்தையும் அச்சுறுத்தும் நோக்கில் என் வீட்டை நோக்கி சுடும் படிக் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த தகவலை டிவிட்டரில் பதிவு செய்த சில மணி நேரங்களில், நெகிரி செம்பிலானில் உள்ள பாகாவ் சாலை சந்திப்பில், மோட்டாரில் வந்த இருவர், காரில் போய் கொண்டு இருந்த சஞ்சீவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதில் அவரது விலாவில் தோட்டாக்கள் பாய்ந்தது. இருப்பினும் சஞ்சீவன் தீவிர மருத்துவ சிகிச்சையால் தற்போது உயிர் பிழைத்துள்ளார்.