Home இந்தியா இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் நரேந்திர மோடி: அத்வானி புகழாரம்

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் நரேந்திர மோடி: அத்வானி புகழாரம்

702
0
SHARE
Ad

கோர்பா, செப். 17- இந்தியாவில் வரும் 2014ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தனது அதிருப்தியை ராஜ்நாத் சிங்கிடம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

modi-advani_350_091213071742சனிக்கிழமை மாலை பிஜேபி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராம்ஜெத்மலானியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

அப்போது மோடியும், அத்வானியும் நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தபோதும்கூட அது இயல்பானதாக இருக்கவில்லை.

ராம்ஜெத்மலானி அவர்கள் இருவரையும் அருகருகே அமர வைக்க முயற்சித்தபோதும் அவர்கள் அவரை தங்கள் நடுவில் அமர வைத்தே பேசினர்.

இந்த நிலையில் நேற்று  காலை சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடியின் சாதனைகள் குறித்துப் பேசி அத்வானி அவரை புகழ்ந்துள்ளார்.

உட்கட்டமைப்பு வசதியிலும், மின்சாரத்துறையிலும் குஜராத் அரசு வெகுவாக முன்னேறியுள்ளது என்று அத்வானி கூறினார்.

தங்கள் கட்சி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ள நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்திலேயே குஜராத் முன்னேற்றம் கண்டதாகவும் எனவே அவர் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் அத்வானி புகழ்ந்துள்ளார்.

அத்துடன் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

சென்ற முறை நடைபெற்ற தேர்தலில் பிஜேபி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அத்வானி தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், தேர்தலில் பிஜேபி தோல்வியைத் தழுவியது. நரேந்திர மோடி தேர்வு குறித்த தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னர் அத்வானி பேசும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும்.

இன்று தனது 63 ஆவது பிறந்த நாளைக் காணும் நரேந்திர மோடிக்கு அத்வானியின் பாராட்டு கிடைத்துள்ளது.