வாஷிங்டன், செப். 18– அமெரிக்காவில் 2014–ம் ஆண்டிற்கான அழகிப் போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது.
அதில் மொத்தம் 53 அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களில் அமெரிக்க அழகியாக நினா தாவுலுரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது தந்தை அமெரிக்காவில் மகப்பேறு டாக்டராக பணி புரிகிறார். அமெரிக்கர் அல்லாத, பொன்னிற கூந்தல் இல்லாத, நீல நிறக்கண்கள் இல்லாத இந்திய வம்சாவளி பெண் நினாவை அழகு ராணியாக தேர்ந்தெடுத்ததை சிலர் விரும்பவில்லை.
அவர் குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவை இனவெறியை தூண்டுபவையாக உள்ளன.
அரேபியர் ஒருவர் மிஸ் அமெரிக்கா ஆகிவிட்டார் என்றும் கூறிய ஒரு நபர் இவரை அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பு படுத்தி தீவிரவாதி என்றும் வர்ணித்துள்ளார். அல்-கொய்தாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இதை நினா தாவுலுரி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக தனது செயலை சேவையின் மூலம் வெளிப்படுத்த உள்ளதாக கூறினார்.