லண்டன், செப். 20- இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மகள் கேத்ரின்.
வழக்கறிஞரான இவர் தனது நண்பருடன் திங்கட்கிழமை இரவு மத்திய லண்டன் மேரிலீபோன் நகரில் உள்ள ஐவோர் பிளேசில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது துப்பாக்கியுடன் வந்த இரண்டு வழிப்பறி ஆசாமிகள், கேத்ரினை மிரட்டி பணம் மற்றும் நகையை கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.
ஆனால், அவர்களிடம் எதுவும் இல்லாததால், கொள்ளையர்கள் வெறுங்கையுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதேபோல் மற்றொரு நபரிடமும் வழிப்பறி செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை உறுதி செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், இரவு 8.30 மணிக்கு இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்ததாக தகவல் கிடைத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கொள்ளையர்கள் யாரையும் தாக்கவில்லை. இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. ஒரு சம்பவத்தில் எந்த பொருளும் திருடப்படவில்லை. மற்றொரு சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியதாகவும் கேத்ரினும், அவரது நண்பரும் தெரிவித்தனர்.