செப்டம்பர் 20 – ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஐஓஎஸ் 7 (iOS 7) மென்பொருள் செயலியை தற்போது ஐபோன் 4 அல்லது ஐபோன் 5 வைத்திருப்பவர்களும், ஐபேட் 2 என்ற கையடக்கக் கருவி வைத்திருப்பவர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இனி இந்த பழைய ஐ-போன்களைப் பயன்படுத்துபவர்களும், ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளை வைத்திருப்பவர்களும் இலவசமாக புதிய ஐஓஎஸ் 7 மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேற்று முதல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் பழைய ஐ-போன் பயனீட்டாளர்கள் பதிவிறக்கம் செய்யத் தொடங்கியதால், ஆப்பிள் நிறுவனத்தின் பதிவிறக்கம் செய்யும் இணையத் தொடர்புகள் நெருக்கடிக்கு உள்ளாகின. பதிவிறக்கம் செய்து முடிக்க மிக நீண்ட நேரம் பிடித்ததாக பல பயனீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஐஓஎஸ் 7 கருவிகளில் இனி நேரடி தமிழ்
ஐஓஎஸ் 7 பதிவிறக்கம் செய்வதன் மூலம், இனி பழைய ஐபோன் வைத்திருப்பவர்களும் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2, ஐபோட் டச் (Touch) போன்ற கருவிகளை வைத்திருப்பவர்களும் தமிழ் மொழி உள்ளீடுகளைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
முதன் முறையாக தனது புதிய மென்பொருளில் நேரடியாக தமிழ் விசைகளை உள்ளீடு செய்திருப்பதன் மூலம், ஐபோனின் நவீன தொழில் நுட்பத்திற்குள் தமிழ் மொழி முதன் முதலாக நேரடியாக அடியெடுத்து வைத்திருக்கின்றது.
இந்திய மொழிகளில் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகள் மட்டுமே புதிய ரக ஐபோன்களில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.