கோலாலம்பூர், செப். 23- “ தெய்வம் சார்ந்த பராரை வேம்பு ” என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது.
அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்களை சிறிது காண்போம்!
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.
வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.