பிப்ரவரி 9 – ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில் ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு 10 தமிழ்ப்பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அரசாங்கம் நல்ல காரியத்திற்காக பணத்தை செலவழித்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். உதாரணத்திற்கு சிலாங்கூர் மாநிலத்தை எடுத்து கொள்ளுங்கள். மாணவர்கள் தங்கி கல்வி கற்கும் வகையில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 50 லட்சம் வெள்ளி செலவில் தங்கும் விடுதி கட்டவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் சிலாங்கூர் மாநிலத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் காலமானால் 2,500 வெள்ளியை இறப்பு சகாய நிதியாக வழங்கி வருகிறோம். மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரம் பேர் சிலாங்கூர் மாநிலத்தில் 60 வயதுடையோர் இருப்பதாகவும், அவர்களில் 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் இத்திட்டத்தில் தங்களைப் பதிந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
இதுவரை 8 கோடியே 60 லட்சம் வெள்ளியை இத்திட்டத்திற்காக வழங்கியிருப்பதாகவும், அதே போல் 2008ஆம் ஆண்டிற்கு பிறகு சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தலா 100 வெள்ளி வழங்கப்பட்டு வருவதாகவும், இது வரை 43 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே தேவையில்லாமல் கலை நிகழ்ச்சிக்காக செலவிடுவதை விடுத்து மக்களுக்கு பயன் அடையும் வகையில் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.