கோலாலம்பூர், அக் 12 – நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலுக்குப் பிறகு மசீச கட்சியின் தேசியத் தலைவர் சுவா சொய் லெக்கிற்கு போதாத காலம் ஆரம்பித்து விட்டது.
பொதுத்தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவிற்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் பலர் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் கட்சியின் பின்னடைவை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சுவா, மசீச அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் வகிக்காது என்று அறிவித்தார்.
அதனால் அவருக்கு கட்சிக்குள் மேலும் பல நெருக்கடிகள் ஏற்ப்பட்டன.
இந்நிலையில் சுவா தனது நிலை குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தல் பின்னடைவிற்குப் பொறுப்பேற்று நான் பதவி விலகத் தயார். ஆனால் என்னோடு சேர்ந்து கட்சியின் துணைத்தலைவரான லியோ தியாங்கும் பதவி விலக வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.”
மேலும், தான் நான்கு ஆண்டுகளாக லியோவுடன் வேலை செய்திருப்பதாகவும், அவருக்கு சுயமாக எந்த ஒரு நிலைப்பாடும் கிடையாது என்றும் சுவா விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் சுவா குறித்து லியோ வெளியிட்ட அறிக்கையில், கட்சி பின்னடைவை சந்தித்ததற்கு முழுக்காரணமும் சுவா சொய் லெக் தான் என்றும், அவரின் ஆபாச காணொளி தான் கட்சியின் பெயரைக் கெடுத்து விட்டது என்றும் கூறியிருந்தார்.