கோலாலம்பூர், அக் 14 – கத்தோலிக்க வார இதழான ‘தி ஹெரால்ட்’ ல் கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று புத்ரஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தி ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் லாரன்ஸ் ஆண்டிரியூ தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்கள் உள்ளதாக லாரன்ஸ் தெரிவித்தார்.
கிறிஸ்தவ பதிப்பில் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று கீழ் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, உள்துறை அமைச்சகமும், அரசாங்கமும் இவ்வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முகமட் அபாண்டி அலி, அப்துல் அஸீஸ் அப்துல் ரஹீம், முகமட் ஜவாவி சாலே ஆகியோர் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டனர்.
இவ்வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், “அல்லாஹ் என்ற சொல் பொதுவாக கிறிஸ்தவ சமயத்தில் நடைமுறையில் இல்லை. ஆனால் கத்தோலிக்க தேவாலயம் தனது வார இதழில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவோம் என்று ஏன் விடாப்பிடியாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதற்கு அனுமதி அளித்தால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயத்தினரிடையே மேலும் பல குழப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.