உன்னாவ்,அக் 14- பழங்கால, சிதலமடைந்த கோட்டையின் கீழ், ஏராளமான தங்கப் புதையல் இருப்பதாக, துறவி ஒருவர் கனவு கண்டதை, வெளியே கூறியதை அடுத்து, தொல்லியல் துறை அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தயாராகி வருகிறது.
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் என்ற இடத்தில், 1857ம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராக, அப்பகுதியை ஆண்ட, ராஜா ராவ் ராம்பக்ஸ் சிங் என்பவர் போரிட்டார். தவுடியா கோட்டையைத் தகர்க்க, ஆங்கிலேயர்கள் தாக்குதல் நடத்தியபோது, ராம்பக்ஸ் சிங் இந்தக் கோட்டையில் தான் தங்கியிருந்தார்.
அவரை, கைது செய்த ஆங்கிலேயர்கள், அவருடைய சொத்துக் கணக்கை கருவூல பதிவேட்டில் பதிவு செய்தனர். அதில், 4,000 தங்க நாணயங்கள், கோட்டையின் அடியில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்ததாம்.
தவுடியா கோட்டையின் கீழ், ஏராளமான, தங்கம், வைரம் போன்றவற்றை புதைத்து வைத்திருப்பதாக, ஷோபன் சர்க்கார் என்ற துறவி, மூன்று மாதங்களுக்கு முன், கனவு கண்டுள்ளார்.
இந்தக் கோட்டையில், 1,000 டன் எடையுள்ள, 4,000 தங்க நாணயங்கள் புதைத்து வைத்திருப்பதாக, தான் கனவில் கண்டதை, மாநில அரசுக்கும், மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, கடந்த வாரம், மாநில அரசுக்கு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. அதில், துறவி கூறுவது உண்மை தானா என, ஆராயுமாறு உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படும், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதையலைத் தேடும் பணியில், மாநில அரசின் ஒத்துழைப்புடன் தொல்லியல் துறை ஈடுபட உள்ளது.தௌடியா கோட்டையில், 15ல் இருந்து 20 அடி ஆழத்தில் தங்க நாணயங்கள் புதைத்து வைத்திருக்கக் கூடும், என, அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதையல் குறித்த தகவல்களை சேகரித்த தொல்லியல் துறை, 18ம் தேதி, அகழ்வாராய்ச்சியைத் துவக்க திட்டமிட்டுள்ளது.