கோலாலம்பூர், அக் 14 – தலைநகரில் இருந்த பெர்லிஸ் மந்திரி பெசார் அஸ்லான் மன் – ன் வீடு கடந்த சனிக்கிழமை இரவு தீக்கிரையானது.
கோலாலம்பூர், புக்கிட் பெர்செகுத்துவானில் உள்ள அந்த இரண்டு மாடி பங்களா வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் நேரவில்லை.
இது குறித்து செந்துல் தீயணைப்புத் துறை தலைவர் சஹாரி முகமட் கூறுகையில், “தீ பிடித்தது என்று தெரிந்ததும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு விரைவாக வெளியேறிவிட்டனர். தீயை அணைக்க 57 தீயணைப்பு வீரர்களும், 6 தீயணைப்பு வண்டியும் வரவழைக்கப்பட்டன. முழுவதும் மரத்தாலான அந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் அடைவதற்குள் 60 சதவிகிதம் தீக்கிரையாகிவிட்டது. அதுமட்டுமின்றி வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தான் தீயணைக்கத் தேவையான நீரை எடுக்க முடிந்தது.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தனது குடும்பம் இந்த தீ சம்பவத்தில் இருந்து தப்பித்தது குறித்து நன்றி தெரிவித்த அஸ்லான், தான் அரசாங்கப் பணியில் சேர்ந்த போதிலிருந்து இந்த வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.