கோலாலம்பூர், அக் 14 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ தேர்தலில் உச்ச மன்ற பதவிக்கு போட்டியிட்ட அம்னோ கட்சியின் மூத்த உறுப்பினரான அனுவார் மூசா (படம்), அம்னோ தலைவர்களின் தாழ்வு மனப்பான்மை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
“அம்னோ தலைவர்கள் தாழ்வு மனப்பான்மையோடு, எதற்கும் குரல் கொடுக்காமல் இருந்தால், பிரதமரின் தவறுகளை யார் சுட்டிக் காட்டுவது?” என்று இன்று மதியம் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
“அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வருவதற்கு உச்ச மன்றத்தைத் தவிர வேறு யாராலும் முடியாது” என்றும் அனுவார் குறிப்பிட்டுள்ளார்.
காரணம் இந்த அதிகாரத்தையும், முக்கியத்துவத்தையும் மக்கள் கொடுத்துள்ளனர். அதன் மூலம் கட்சி அரசாங்கத்தை அமைத்துள்ளது.
“உச்ச மன்றம் பிரதமரின் கையை முத்தமிட்டுக்கொண்டே இருக்குமேயானால், மிக விரைவில் அம்னோ காலாவதியாகிவிடும்” என்றும் அனுவார் எச்சரித்துள்ளார்.
உச்ச மன்றம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் உச்ச நிலையில் இருந்து செயல்படவேண்டும் என்றும் அனுவார் கூறியுள்ளார்.