புது டில்லி: இந்திய மத்திய அரசு தமிழ் மொழியைத் தொடர்ந்து புறக்கணிப்பதாக கூறி வந்த நிலையில், அண்மையில், பண்டிட் தீன்தயாள் மத்திய தொல்லியல் கல்லூரியில் தொல்லியல் பட்டப் படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பாரசீகம், அரபி ஆகிய மொழிகள் இடம்பெற்றன.
இதில் தமிழ் மொழி இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுக்கப்படுவதாக மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
கீழடி போன்ற பழமையான நாகரிகங்களைக் கொண்ட, தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழியை புறக்கணிப்பது சரியானதொன்று இல்லை என்று கூறப்பட்டது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடிசா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.