Home கட்சித் தேர்தல்கள் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட தயாராகின்றார் சோதிநாதன்?

துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட தயாராகின்றார் சோதிநாதன்?

476
0
SHARE
Ad

Sothi---Featureஅக்டோபர் 15 – நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ம.இ.கா கட்சித் தேர்தல்களில் நடப்பு தேசியத் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை எதிர்த்துப் போட்டியிட கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எஸ்.சோதிநாதன் (படம்) தயாராகி வருகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களிடம் தான் போட்டியிட்டால் வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சோதிநாதன் கருத்துக் கணிப்பு நடத்தி வருகின்றார்.

அதே வேளையில், தற்போது நோய்வாய்ப்பட்டிருக்கும் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியத்தின் ஆதரவு வாக்குகளை கவர்வதற்காக டான்ஸ்ரீ சுப்ராவின் முக்கிய ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் நடந்து முடிந்த, அதிகமான பேராளர்களைக் கொண்ட சில முக்கிய தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக இருப்பதாக சோதிநாதன் கருதுகின்றார்.

குறிப்பாக, நாட்டிலேயே அதிகமான பேராளர்களைக் கொண்ட (41 பேராளர்கள்) சிப்பாங் தொகுதியில் வெற்றி பெற்ற பேராளர்களில் பெரும்பாலோர் சோதிக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

33 பேராளர்களைக் கொண்ட தெலுக் கெமாங் தொகுதியில் சோதிக்கு ஆதரவான டத்தோ வேலு தோல்வியுற்றாலும், பேராளர்களில் பெரும்பாலோர் மண்ணின் மைந்தன் என்ற முறையில் சோதிக்கு – அவர் எந்த பதவிக்குப் போட்டியிட்டாலும் – தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சோதிநாதன் தெலுக் கெமாங் தொகுதியை உள்ளடக்கிய போர்ட்டிக்சன் நகரை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சோதிக்கு உள்ள ஒரே பிரச்சனை தான் துணைத் தலைவர் போட்டியில் குதித்தால், தேசியத் தலைவர் பழனிவேலுவின் ஆதரவும் ஆசியும் கிடைக்குமா என்பதுதான்!

கூடிய விரைவில் பழனிவேலுவைச் சந்தித்து சோதிநாதன் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பார் என்றும் அவரது முடிவுக்கு பழனிவேலுவின் ஆதரவாளர்கள் மறைமுக ஆதரவை வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சோதிநாதனை துணைத் தலைவராக வெல்ல வைப்பதன் மூலம், பழனிவேல் மேலும் ஒரு தவணைக்கு தேசியத் தலைவராக நீடிப்பதில் சிக்கல் இருக்காது என்பதாலும், பழனிவேல் மேலும் ஒரு தவணைக்கு தனது பதவியில் நீடிப்பதற்கு சோதிநாதன் தனது ஆதரவை வழங்க சம்மதித்துள்ளதாலும், பழனிவேலுவின் ஆதரவாளர்கள் சோதிக்கு ஆதரவாக கோதாவில் இறங்க மும்முரமாகி வருகின்றனர் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

பழனிவேலுவிடம் சந்திப்பு நடத்திய பின்னர் கூடிய விரைவில் தனது முடிவை சோதிநாதன் அறிவிப்பார் என்றும் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.