Home 13வது பொதுத் தேர்தல் ஐபிஎப் கட்சி சம்பந்தனுக்கும், பதிவகத்திற்கும் எதிராக இடைக்காலத் தடையுத்தரவு!

ஐபிஎப் கட்சி சம்பந்தனுக்கும், பதிவகத்திற்கும் எதிராக இடைக்காலத் தடையுத்தரவு!

770
0
SHARE
Ad

sambanthanபினாங்கு, அக் 17 – ஐபிஎப் கட்சியின் தேசியத்தலைவர் என்று கூறிக்கொள்ளும் டத்தோ எம். சம்பந்தனுக்கு எதிராகவும், தேசியப் பொதுச் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் லோகநாதன் துரைசாமிக்கு எதிராகவும் மற்றும் இயக்கங்களின் பதிவகத்திற்கு எதிராகவும் மு.வீ.மதியழகன் என்பவர் பினாங்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று தடை உத்தரவைப் பெற்றார்.

நேற்று தனது வழக்கறிஞர் வி.அமரேசனுடன் பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்த மதியழகன் இத்தடையுத்தரவைப் பெற்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.

இது குறித்து வழக்கறிஞர் அமரேசன் கூறுகையில், இத்தடையுத்தரவின் படி 7 முக்கியத் தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

முதலில், இயக்கங்களின் பதிவகம் கடந்த 23-7-13 தேதியன்று ஐபிஎப் கட்சியின் தேசியத்தலைவர் சம்பந்தனே என்று கூறியுள்ளதாக வெளிவந்துள்ள தகவலை மீட்டுக்கொள்ள வேண்டும்.

பண்டிதனின் மறைவுக்குப் பின் மூன்றாகப் பிரிந்து கிடக்கும் ஐபிஎப் கட்சியை ஒன்றுபடுத்தும் வகையில் சுயேட்சைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் குழு கட்சியை வழி நடத்தி அடுத்த 60 நாட்களுக்குள் பேராளர் மாநாட்டை நடத்தி முறையான நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு நடத்தப்படும் தேர்தலில் கடந்த 31-12-2008 ஆம் ஆண்டு உறுப்பினர் பட்டியலை மட்டுமே அக்குழு பேராளர் மாநாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும். காரணம் அதற்குப் பிறகு கட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதால் அப்பட்டியலே அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 4-7-2009 ஆம் தேதி கட்சியை ஒன்றுபடுத்தும் படி பதிவகம் விடுத்தக் கோரிக்கையை எத்தரப்பினரும் முறையாகப் பின்பற்றவில்லை என்று சொல்லப்படுகிறது.

அப்போது இரு தரப்பினரும் பேராளர் மாநாடுகளை நடத்தியதாகக் கூறிக்கொண்டன.

கடந்த 2009 -2010 ஆம் ஆண்டு சம்பந்தன் தரப்பினர் நடத்திய பேராளர் மாநாட்டிற்கு மதியழகன் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவ்வழக்கிற்கான தேதி இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் அமரேசன் தெரிவித்தார். இவற்றுடன் இவ்வழக்கிற்கான செலவுத் தொகையுடன் கூடிய இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.