Home நாடு காவல்துறையின் அதிரடி வேட்டையில் கலந்து கொள்ள சுரேந்திரன் தயார்! பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை!

காவல்துறையின் அதிரடி வேட்டையில் கலந்து கொள்ள சுரேந்திரன் தயார்! பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை!

509
0
SHARE
Ad

Khalid-Abu-Bakarகோலாலம்பூர், அக் 17 – குற்றங்களுக்கு எதிரான காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ள பிகேஆர் உதவித்தலைவர் என்.சுரேந்திரனுடன் பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி உண்டா என்ற கேள்விக்கு தேசிய காவல் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களுக்கு தற்போது அனுமதி இல்லை என்று காலிட் அறிவித்துள்ளார்.

சுரேந்திரனுக்கு காவல்துறை அழைப்பு விடுத்ததற்கான காரணம் அவர் காவல்துறையின் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்களையும், நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான். இது ஒரு அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ அல்ல என்றும் காலிட் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

“காவல்துறையினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சுரேந்திரன் நேரடியாகப் பார்த்து உணர வேண்டும் என்பதற்காக தான் அப்படி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.”

“இருப்பினும், சுரேந்திரன் சில கடுமையான சவால்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதால் அவரிடம் தேவையான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, முழு சம்மதத்தின் பேரில் தான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.”

“காரணம் பின்னர் எங்கள் மீது யாரும் பழி சுமத்திவிடக்கூடாது இல்லையா?” என்று காலிட் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆயுதமேந்திய குண்டர் கும்பல்களை ஒழிக்க தங்களின் அடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்று கூறிய காலிட், எல்லா சண்டைகளும் ரத்தக்களரியுடன் தான் முடியும் என்று எண்ணிவிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

“அவர்கள் சுட்டால் நாங்களும் திருப்பி சுடுவோம். எங்களின் வீரர்கள் சுடும் ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். சண்டையின் போது எப்போதுமே குற்றவாளிகளின் பக்கம் தான் அதிக சேதாரம் ஏற்படும். இது உலக அளவில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தான்” என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் சுடுவோம்.. பிறகு தான் விசாரணை என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த சுரேந்திரனை, காவல்துறை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு காலிட் அழைப்பு விடுத்தார்.

காலிட்டின் அழைப்பை ஏற்று சுரேந்திரன் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டு நேற்று பிற்பகல் 2 மணியளவில் புக்கிட் அமான் காவல்நிலையத்தில் தமக்கான பாதுகாப்பு ஆடையை அணிந்து சரிபார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.