கோலாலம்பூர், அக் 9- குண்டர் கும்பல்களில் மாணவர்களும் குடும்ப மாதர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதைத் தடுக்க பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையை தேசிய காவல்துறை தொடங்கியுள்ளது.
திங்கட்கிழமை முதல் பெண் அதிகாரிகளாலும், கண்காணிப்பாளர்களாலும் இந்நடவடிக்கை கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டரசு காவல்துறை (புக்கிட் அமான்) விபச்சார, சூதாட்ட, குண்டர் கும்பல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் (படம்) கூறினார்.
பணத்தைக் காட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களைக் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக சேர்க்க 36, 08, 04 போன்ற குண்டர் கும்பல்கள் தீவிர முயற்சி செய்கின்றன. இதில் பெண் மாணவர்களும் அடங்குவர். இம்மாதிரியானவர்களிடம் இருந்து மாணவர்களை காவல்துறை காப்பாற்ற பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கை கை கொடுக்கும் என்று அவர் கூறினார்.
பெண் காவல்துறை அதிகாரிகளும்,கண்காணிப்பாளர்களும் குடும்ப மாதர்களை அணுகி குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிப்பர் என்று அப்துல் ஜாலில் தெரிவித்தார். மேலும், இந்நடவடிக்கை நாடு தழுவிய அளவில் விரிவுப்படுத்துவது பற்றியும் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சனையை முளையிலேயே கிள்ளியெறிய பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமுதாயத்தின் பங்கு மிக அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.