கோலாலம்பூர், அக் 23 – ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஐபேட் – ன் பெயர் ஐபேட் ஏர் (The iPad Air). இந்த புதிய வகை ஐபேட் ஒரு பவுண்ட் எடையையும், 7.5 மில்லிமீட்டர் தடிமனையும் கொண்டு 20 சதவிகிதம் மெல்லிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக மெல்லிய முழு அளவு கையடக்கக் கணினியாக இது அமையும் என்ற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய வகை ஐபேட்டின் ஒட்டுமொத்த அளவு ஏற்கனவே வந்த ஆப்பிள் ஐபேட்களைக் காட்டிலும் 24 சதவிகிதம் குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவுத் தலைவர் பிலிப் சில்லர் கூறுகையில், “இந்த ஐபேட் ஏர் மிகவும் மெல்லியதோடு மட்டுமின்றி அதிக சக்தி வாய்ந்தது. நீங்கள் ஒருமுறை அதை கையில் பிடித்துப் பார்த்தால் அதனுடைய சிறப்பு உங்களுக்குத் தெரியும். இந்த ஐபேட் 9.7 அங்குல ரெட்டினா திரையையும், ஒரு பவுண்ட் எடையையும், ஐஓஎஸ் 7 மென்பொருளுடன், நாள் முழுவதும் உபயோகிக்கும் வகையில் மின்கலனுடன் (Battery), உலகிலேயே மிக மெல்லிய முழு அளவு கையடக்கக் கணினியாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தவிர ஐபோன் 5எஸ் வகை செல்பேசியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புதிய A7 சிப் மற்றும் 64 பிட் கட்டமைப்பும் இந்த ஐபேட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிய M7 Motion Processor இயங்கு செயலியோடு,கிராபிக்ஸ் மற்றும் சிபியு செயல்திறன் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 மெகா பிட்சல் அளவில் ஐசைட் கேமெரா மற்றும் இரண்டு ஒலிவாங்கிகள் (microphones) ஆகியவற்றை இந்த ஐபேட் கொண்டுள்ளது.
இதற்கு முந்தைய ஐபேட் ஐக் காட்டிலும் இந்த ஐபேட் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று பிலிப் சில்லர் உறுதியாகக் கூறுகிறார்.
வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் கிடைக்கவுள்ள இந்த புதிய வகை ஐபேட் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது.
அதன் விலை 499 டாலர் எனவும், செல்லுலார் எல்டிஇ தொடர்பு கொண்ட வகை 629 டாலர் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.